இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை


விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை
நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

"லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம் என்றும் அவர் கூறினார்.

சிறப்புரையாற்றிய தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தின் துணை நீதிபதி திரு ஏ தமிழ்ச்செல்வன், ஏழ்மை மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் ஒருங்கிணைந்த மற்றும் நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு இந்தியா பாடுபட வேண்டும் என்று கூறினார். பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் ஆளுகையில் முறையாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எதிர்கால இந்தியாவுக்கான விரிவான திட்டம் குறித்து பேசிய திரு தமிழ்ச்செல்வன், பொருளாதார வளர்ச்சிக்காக நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகளை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். "கல்விமுறை சர்வதேச தரங்களுக்கு உயர்த்தப்பட வேண்டும். சர்வதேச தரத்திலான மருத்துவ சேவைகள் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். பெண்கள் உள்ளிட்ட வலிமை குறைந்த பிரிவினர் மீதான ஆண்களின் எண்ணம் மாற வேண்டும்," என்று அவர் கூறினார். வரும் காலங்களில் சமூக உரிமைகள் பாதுகாப்பு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கான முக்கியத்துவம் குறித்தும் திரு தமிழ்ச்செல்வன் பேசினார்.

இணைய கருத்தரங்கில் பேசிய ஓய்வு பெற்ற இந்திய வன சேவைகள் அதிகாரியான டாக்டர் எஸ் பால்ராஜ், அமெரிக்க, ஜப்பானிய அல்லது சீன வளர்ச்சி முறையை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட, தனது வேர்களுக்கு திரும்பி இழந்த பெருமையை மீட்டெடுத்து பெருந்திட்டத்தை இந்தியா சொந்தமாக வகுக்க வேண்டும் என்று கூறினார். 

ஸ்வார்ட் அமைப்பின் இயக்குனர் திரு வி எஸ் எஸ் ஜலாலுதீன், கொன்சகா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணைப் பேராசிரியர் டாக்டர் ஏ அந்துவான் ரெக்லின் மற்றும் தர்மபுரி டான் பாஸ்கோ கல்லூரியின் சமூக பணிகள் துறையின் தலைவர் திரு செல்வநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

தர்மபுரி கள விளம்பர அலுவலகத்தின் கள விளம்பர அலுவலர் திரு பிபின் எஸ் நாத் இணைய கருத்தரங்கில் பங்கேற்றவர்களை வரவேற்றார். கள விளம்பர உதவியாளர் திரு எஸ் வீரமணி நன்றி உரையாற்றினார். ஜும் தளம் மற்றும் யூடியூபில் நடைபெற்ற இந்த இணைய கருத்தரங்கில் சுமார் 200 பேர் பங்கேற்றனர். கலந்து கொண்டவர்களுக்கும் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்