திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் 75ஆவது சுதந்திர தின விழா

75ஆவது சுதந்திர தின விழா வெபினாரில் பிரபலமாகாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் நினைவு கூறப்பட்டனர்


திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் 75ஆவது சுதந்திர தின விழா

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 75ஆவது சுதந்திர தின வெபினாரில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக போராடி உயிர் தியாகம் உள்ளிட்ட பல்வேறு தியாகங்களைச் செய்த பிரபலமாகாத தலைவர்கள் நினைவு கூரப்பட்டனர்.

புதுச்சேரி  மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது தலைமையுரையில் இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஆனால் பிரபலமாகாத தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பங்களிப்பையும் வெளிப்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகத் தெரிவித்தார். புகழ்பெற்ற தலைவர்கள், சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடங்கள், சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் மற்றும் பிரபலமாகாத தலைவர்கள் என்று 4 பிரிவாக சுதந்திரப் போராட்ட வரலாறு பிரித்துப் பார்க்கப்பட வேண்டும் என்று சிவக்குமார் மேலும் தெரிவித்தார். திருச்சியில் உள்ள பொன்மலை ரெயில்வே பணிமனையில் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் போராடிய போது பிரிட்டிஷ் அரசு மலபார் போலிஸ் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல தொழிலாளர்கள் இறந்து போனார்கள். அவர்கள் வரலாறு நமக்குத் தெரியாமலேயே போய்விட்டது என்று சிவக்குமார் உதாரணம் காட்டினார். வரலாற்றில் ஆவணப்படுத்துதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலேயே போய்விட்டன என்றும் குறிப்பிட்டார். மதுரையைச் சேர்ந்த பெருமாள் பிள்ளை, கோயம்புத்தூரைச் சேர்ந்த ராமசாமி போன்றோர் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய பேரணியில் பிரிட்டிஷார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார்கள். இவர்கள் பிரபலமாகாத தலைவர்களாகவே இருக்கின்றார்கள். மதுரையில் கே.பி.ஜானகியம்மாள் சுதந்திரப் போராட்டம் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடத்துவதற்காக தேவைப்பட்ட செலவிற்கு தனது நகைகளை எல்லாம் விற்று பணம் அளித்தார் என்று குறிப்பிட்ட சிவக்குமார் மாயக்காள் போன்ற பிரபலமாகாத பல பெண் போராட்டவாதிகளையும் உதாரணங்களாக எடுத்துக்காட்டி பேசினார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் காந்திஜி முன்வைத்த செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தால் உந்துதல் பெற்ற உஷா மேத்தா என்ற இளம்பெண் சுதந்திரப் போராட்டம் குறித்த செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு வானொலி ஒலிபரப்பையே தலைமறைவாக நடத்திய வரலாற்றையும் சிவக்குமார் எடுத்துரைத்தார்.

திருச்சிராப்பள்ளி களவிளம்பர அலுவலர் திரு கே.தேவிபத்மநாபன் தனது அறிமுக உரையில் உலகின் மிகவும் வெற்றிகரமான மற்றும் மிகப் பெரிய குடியரசு நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்டார். இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டை ஒட்டி நாடு முழுவதும் ஆசாதி கா அம்ரித் மகோத்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு தருணங்களில் நமது குடியரசின் குறிக்கோள்களின் வலிமை வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. நமது குடியரசின் கருத்துக்கள் அனைத்தும் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன.  நாம் சுதந்திரமான வாழ்வை மேற்கொள்வதற்கு உகந்த பாதுகாப்பான மற்றும் பாதுகாவல் நிறைந்த தேசத்தை உருவாக்கித் தருவதற்காக இன்னுயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைத்துப் பார்க்க வேண்டிய தருணமாக இந்த கொண்டாட்ட நேரம் உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இன்றைய நாள் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நாளாகும். ஏனெனில் 1945ஆம் ஆண்டு இந்த நாளில்தான் நேத்தாஜி சுபாஷ் சந்திர போஸ் பயணித்த விமானம் காணாமல் போனது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்றும் மறைவதில்லை; அவர்கள் இளையோரின் மனங்களில் உந்து சக்தியாக வாழ்கிறார்கள். எழுதப்பட்ட வரலாற்றின்படி பார்த்தோம் என்றால் முதலாவது சுதந்திரப் போராட்டம் 1857ல் தொடங்கப்பட்டதாக குறிக்கப்பட்டு இருக்கும். ஆனால் அதற்கு முன்னரே ஜான்சி ராணி போராடியது நமக்குத் தெரியும். பிரிட்டிஷாரை எதிர்த்து 1780லேயே சிவகங்கை அரசி வீரமங்கை வேலுநாச்சியார் போராடி உள்ளார். பிரிட்டிஷாரை எதிர்த்த முதல் அரசியாக இவரே திகழ்கிறார். ராணி வேலுநாச்சியாரின் பெண் தளபதியாக இருந்த குயிலி முதல் தற்கொலை போராளியாக இருந்திருக்கிறார். தன்னைத்தானே தீயிட்டுக் கொண்டு பிரிட்டிஷ் தளவாடங்களுக்குள் குதித்து அதனை அவர் அழித்துள்ளார். திருப்பூரில் கொடிகாத்த குமரன் சாகும் வரை பிரிட்டிஷ் போலிஸாரால் அடிபட்ட போதும் கையில் பிடித்திருந்த தேசியக் கொடியை நழுவவிடவே இல்லை. வீரபாண்டிய கட்டபொம்மன், தீரன் சின்னமலை, ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்றோர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடி உள்ளனர். திருச்சிராப்பள்ளியில் ஏப்ரல் 13, 1930ல் ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி புறப்பட்ட உப்பு சத்தியாக்கிரக பேரணி என்பது பிரிட்டிஷார் சுமத்திய உப்பு வரிக்கு எதிராக தேசிய அளவில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு அங்கமாகும் என்று மேலும் தேவிபத்மநாபன் குறிப்பிட்டார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் விரிவாக்க நடவடிக்கைகள் துறையின் தலைவர் டாக்டர் வி.ஆனந்த் கிடியோன் தனது சிறப்புரையில் சுதந்திர விழா என்பது ஒரு நாளில் கொண்டாடி முடித்து விட வேண்டிய விழா அல்ல. ஏனெனில் சுதந்திரத்திற்காக பல ஆண்டுகள், பல தலைவர்கள் போராடி உள்ளனர். இத்தகைய சுதந்திரப் போராட்ட தலைவர்கள் அனைவரையும் இளம் தலைமுறையினர் நினைவு கூர்ந்து காலமெல்லாம் அவர்களுடைய தியாகங்களை போற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் விரிவாக்க அலுவலர் டாக்டர் ஆர்.ரவி தனது வாழ்த்துரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்து இளைஞர்கள் ஊக்கம் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இந்திய சுதந்திரத்திற்காக விடுதலைப் போராட்ட வீரர்கள் சந்தித்த கொடுமைகளை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திராவின் இளையோர் ஒருங்கிணைப்பாளர் திரு கே.சுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார். சுதந்திரம் பெறுவதற்காக பிரிட்டிஷாரை எதிர்த்து நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக போராடினார்கள். பிரிட்டிஷாரை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடிய மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த அவர் ராஜாஜியால் திருச்சிராப்பள்ளியில் தொடங்கப்பட்டு வேதாரண்யத்தில் நிறைவுற்ற உப்பு சத்தியாக்கிரக பேரணி குறித்தும் எடுத்துரைத்தார். உதவிகள் ஏதும் செய்யக் கூடாது என்ற பிரிட்டிஷ் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையை மீறியும் கிராம மக்கள் வழியில் உப்பு சத்தியாக்கிரக போராட்டவாதிகளுக்கு உணவு பொட்டலங்களை மரங்களிலே தொங்கவிட்டு உதவி புரிந்தனர். திருச்சியில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்த பிரபலமாகாத ஜேம்ஸ், நாராயணசாமி நாயுடு மற்றும் நாகமலை தேவர் போன்றோரின் தியாகங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

ஓய்வு பெற்ற பத்திரிகை தகவல் அலுவலகத்தின் துணை இயக்குனர் திரு எம்.தெரஸநாதன் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பல இன்னல்களைத் தாங்கி போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இன்றைய மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

திருச்சி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் களவிளம்பர உதவியாளர் திரு கே.ரவீந்திரன் வெபினாரை ஒருங்கிணைத்து நடத்தினார். வெபினாரில் கலந்து கொண்ட அனைவருக்கும் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் மின்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்