பிரதமரின் கிசான் திட்டத்தில், 9வது தவணையை அளித்தார் பிரதமர்

பிரதமர் அலுவலகம் பிரதமரின் கிசான் திட்டத்தில், 9வது தவணையை அளித்தார் பிரதமர்9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் ரூ.19,500 கோடிக்கும் மேற்பட்ட பணம் நேரடியாக செலுத்தப்பட்டது

2047ம் ஆண்டில், 100வது சுதந்திர ஆண்டை நாடு நிறைவு செய்யும்போது, இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில் நமது வேளாண்மையும் மற்றும் நமது விவசாயிகளும் முக்கிய பங்கு வகிப்பர்: பிரதமர்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து, இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, ரூ.1,70,000 கோடி, நெற்பயிர் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்றுள்ளது மற்றும் சுமார் ரூ.85,000 கோடி கோதுமை பயிர் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக சென்றுள்ளது: பிரதமர்

தனது வேண்டுகோளை ஏற்று பருப்புகளின் உற்பத்தியை 50 சதவீதம் அதிகரித்த விவசாயிகளுக்கு பிரதமர் நன்றி

தேசிய சமையல் எண்ணெய் திட்டத்தில் - பாமாயில் மூலம், சமையல் எண்ணெய் உற்பத்தி தற்சார்பு நிலையை அடைய நாடு உறுதி எடுத்துள்ளது. சமையல் எண்ணெய் உற்பத்தி சூழலை உருவாக்க ரூ.11,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்படும்.

முதல் முறையாக, வேளாண் ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது:

பிரதமரின் கிசான் சம்மான் நிதி  திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, விவசாய பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். இதன் மூலம் 9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு, ரூ.19,500 கோடிக்கும் மேற்பட்ட தொகை பரிமாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இது 9வது தவணை நிதியுதவி ஆகும்.

 இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் இடையே விதைப்பு காலம் பற்றி பேசிய பிரதமர், இன்று பெறப்பட்ட தொகை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.  ரூ.1 லட்சம் கோடி தொகுப்பிலான கிசான் உள்கட்டமைப்பு நிதி திட்டம், இன்று ஓராண்டை நிறைவு செய்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.  இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு கடைகளில் தேன் மற்றும் குங்குமப் பூ விற்பனை திட்டம் குறித்தும் பிரதமர் பேசினார்.  தேன் திட்டம், ரூ.700 கோடி  ஏற்றுமதிக்கு வழிவகுத்துள்ளது, இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

வரவிருக்கும் 75வது சுதந்திர தினத்தை குறிப்பிட்ட பிரதமர், இது பெருமிதமான தருணம் மட்டும் அல்ல, புதிய தீர்மானங்களுக்கான வாய்ப்பு என கூறினார். வரும் 25 ஆண்டுகளில், இந்தியாவை நாம் எங்கே பார்க்க விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்க, நாம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 2047-ம் ஆண்டு 100வது சுதந்திர தினத்தை நாடு நிறைவு செய்யும்போது, இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில், நமது வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என பிரதமர் குறிப்பிட்டார்.  புதிய சவால்களை சந்திக்கவும், புதிய சந்தர்ப்பங்களின் சாதகத்தை எடுத்துக் கொள்ளவும், இந்திய வேளாண்மைக்கு வழிகாட்ட இதுதான் சரியான நேரம்.  மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இந்திய விவசாயத்தில் மாற்றங்கள் தேவை என அவர் கூறினார்.

பெருந்தொற்று காலத்தில், உற்பத்தியில் வரலாறு படைத்ததற்காக விவசாயிகளை அவர் பாராட்டினார். இந்த சிக்கலான நேரத்தில், விவசாயிகளின் கஷ்டங்களை குறைக்க அரசு எடுத்த நடவடிக்கைகளை அவர் சுட்டிக் காட்டினார்.   விதைகள், உரங்களின் தடையற்ற விநியோகம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை அரசு உறுதி செய்தது. யூரியா ஆண்டு முழுவதும் கிடைத்தது மற்றும் சர்வதேச சந்தையில் டிஏபி உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தபோதும், அரசு உடனடியாக ரூ.12,000 கோடி மானியத்தை  ஏற்பாடு செய்தது. இதனால் இந்த சுமையை விவசாயிகளால் உணரப்படவில்லை.

காரிப் அல்லது ராபி சந்தை பருவமாக இருக்கட்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கொள்முதலை  அரசு செய்துள்ளது என பிரதமர் கூறினார்.  இதன் காரணமாக, சுமார் ரூ.1,70,000 கோடி நெல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சென்றுள்ளது, சுமார் ரூ.85,000 கோடி கோதுமை விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக சென்றுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் பருப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளிடம் வலியுறுத்தியதை பிரதமர் நினைவுப்படுத்தினார்.  இதன் காரணமாக, கடந்த 6 ஆண்டுகளில், நாட்டில் பருப்பு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தேசிய சமையல் எண்ணெய் திட்டம் - பாமாயில்-ஐ சுட்டிக் காட்டிய பிரதமர், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பு நிலையை அடைய எடுத்த உறுதிமொழிதான் தேசிய சமையல் எண்ணெய் திட்டம்-பாமாயில் என கூறினார்.  இன்றைய வரலாற்று சிறப்புமிக்க நாளில்,  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை, நாடு நினைவுக் கூறுகையில், இந்த தீர்மானம், நமக்கு புதிய சக்தியை அளிக்கிறது என அவர் கூறினார்.  தேசிய சமையல் எண்ணெய் -பாமாயில் திட்டம் மூலம், சமையல் எண்ணெய் உற்பத்திக்கு ரூ.11,000 கோடிக்கு  மேல் முதலீடு செய்யப்படும் என அவர் கூறினார். தரமான விதைகள் முதல் தொழில்நுட்பம் வரை விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.  முதல் முறையாக, வேளாண் ஏற்றுமதியில் முதல் 10  நாடுகளில், இந்தியா இடம்பிடித்துள்ளது என பிரதமர் சுட்டிக் காட்டினார். கொரோனா காலத்தில், வேளாண் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இன்று, இந்தியா மிகப் பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக அங்கீகரிக்கப்படும் போது, சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரியானது அல்ல.

நாட்டின் வேளாண் கொள்கைளில் சிறு விவசாயிகளுக்கு, தற்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் குறிப்பிட்டார். இந்த உணர்வுடன், கடந்த சில ஆண்டுகளில், சிறு விவசாயிகளுக்கு வசதி மற்றும் பாதுகாப்பு வழங்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 கோடி வழங்கப்பட்டுள்ளது.  இவற்றில் ரூ. 1 லட்சம் மோடி கொரோனா காலத்தில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.  இதுபோன்று விவசாயிகள், நாட்டில் வரவுள்ள வேளாண் கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் பயனடைவர்.  உணவு பூங்காக்கள், கிசான் ரயில்கள் மற்றும் உள்கட்டமைப்பு நிதி  ஆகியவை சிறு விவசாயிகளுக்கு உதவும். கடந்தாண்டில், உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.  இந்த நடவடிக்கைகள், சிறு விவசாயிகளின் சந்தைகளுக்கான அணுகலையும், விவசாய உற்பத்தியாளர் சங்கம் மூலம்  பேரம் பேசும் சக்தியையும் அதிகரித்தது என்றும் பிரதமர் கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்