திண்டுக்கல்லைக் கடந்தது சிஆர்பிஎஃப் மிதிவண்டி பேரணி

கன்னியாகுமரி முதல் புதுதில்லி வரை: மதுரை மற்றும் திண்டுக்கல்லைக் கடந்தது சிஆர்பிஎஃப் மிதிவண்டி பேரணி


கன்னியாகுமரியிலிருந்து கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கிய மத்திய ரிசர்வ் காவல் படையின் மிதிவண்டி பேரணி, இன்று காலை மதுரை மாவட்டத்தின் கீழக்குயில்குடி நகரை அடைந்தது. குழுவின் தலைவர் மற்றும் வீரர்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் திரு அனீஷ் சேகர் மற்றும்  காவல்துறை கண்காணிப்பாளர் (ஊரக) திரு பாஸ்கரன் கலந்து கொண்டனர்.

கேஎம்ஆர் சர்வதேசப் பள்ளியின் மாணவர்கள், யோகா, சிலம்பாட்டம் மற்றும் நடனம் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பள்ளியின் ஆசிரியர்கள், குழுவினருக்கும், அதிகாரிகளுக்கும் ராக்கி கட்டினார்கள். மேலும், உள்ளூர் கலைஞர்களின் கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற ஏராளமான தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மீனாட்சி அம்மன் ஆலயம் மற்றும் மதுரையின் கலாச்சாரம் குறித்த புத்தகங்களை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், குழுவினரிடம் வழங்கினார்கள். மதுரை ரோட்டரி சங்கங்களின் சார்பாக மிதிவண்டி பேரணியில் பங்கேற்ற வீரர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

காலை 8:30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்ட பேரணி, நண்பகல் வாக்கில் திண்டுக்கல் சென்றடைந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஸ்ரீநிவாசன், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து  குழுவினருடன் மிதிவண்டியில் பயணம் செய்தார். வீரர்களைக் கௌரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய ஆயுதப் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி முதல் ராஜ்காட் வரை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மிதிவண்டி பேரணி, 2850 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து அக்டோபர் 2-ஆம் தேதி புதுதில்லியின் ராஜ்காட்டில் நிறைவடையும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் வழியாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்