ஊரக வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்

ஏழைகளுக்கு உத்தரவாதத்துடன் கூடிய வருவாயுடன் ஊரக வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்
சமீப வருடங்களில் கிராமப்புற மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த திட்டங்களில் ஒன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டமாகும். கிராமப்புற மக்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்குவதற்காக 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பெயர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டமாகப் பின்னர் மாற்றப்பட்டது. நாடு முழுவதுமுள்ள 715 மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 29.68 கோடி பணியாளர்களுக்கு 15.38 கோடிப் பணி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் ஆவணங்களின் படி தமிழ்நாட்டில் மட்டும் 1.32 கோடி பணியாளர்களுக்கு 91 லட்சம் பணி அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுள் 89.96 லட்சம் பணியாளர்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளனர்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், நீர்ப்பாசனம் மற்றும் நீர் சேமிப்பு தொடர்பான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டப் பணிகளை தொடருமாறு தமிழக அரசு உத்தரவுகளை பிறப்பித்தது. முகக் கவசங்களை அணியுமாறு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டப் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, நீர்ப்பாசனம், குளங்கள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாருதல், மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானம் மற்றும் பரமாரிப்பு, மருத்துவமனைகள், சாலைகள், பாலங்கள், நீர் விநியோகம், மின்சாரப் பகிர்மானம் தொடர்பான பணிகளுக்கான ஒப்புதலை தமிழ்நாடு அரசு வழங்கியது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்சமயம் 3.7 லட்சம் பணியாளர்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், 3.06 லட்சம் பணி அட்டைகள் உபயோகத்தில் உள்ளன. பலரின் வாழ்வாதாரத்தை பாதித்த கொவிட் பெருந்தொற்று காலத்தில் கிராமப்புற மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் ஒரு வரமாக அமைந்தது. அதிக நாட்களுக்குப் பணி வழங்குமாறும், ஊதியத்தை அதிகரிக்குமாறும் பணியாளர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்ட மேற்பார்வையாளராகப் பணியாற்றி வரும் திருமதி எம் பொன்னி, திருச்சிராப்பள்ளியின் மணிகண்டம் வட்டத்தில் உள்ள மேக்குடி பஞ்சாயத்தில் ஒரு நாளைக்கு 130 பேருக்குப் பணி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஒரு மாதத்தில் 6 நாட்களுக்குப் பணி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் உருவாக்கப்படுகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் தனது மேற்பார்வையின் கீழ் செங்குறிச்சி கிராமத்தில் 44 நபர்கள் பணியாற்றி வருவதாகவும், அவர்களுள் 41 பேர் பெண்கள், மூன்று பேர் ஆண்கள் என்றும் திருமதி பொன்னி தெரிவித்தார்.

மேக்குடி பஞ்சாயத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டப் பணியாளரான திருமதி ரம்யா ஒரு நாளைக்கு ரூ 220 ஊதியமாக தாங்கள் தற்போது பெற்று வருவதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு ஊதியத்தை அதிகரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மேக்குடி பஞ்சாயத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டப் பணியாளரான திருமதி பானுமதி, குழுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் அதிகமானோருக்குப் பணி கிடைக்கும் என்றார். தற்போது ஒரு பஞ்சாயத்தில் ஒரு குழு மட்டுமே உள்ள நிலையில், பதிவுப் பெற்ற 800 பேரில் 130 நபர்களுக்கு மட்டுமே பணிகள் கிடைக்கின்றன. ஒரு கிராமத்திற்கு குறைந்தபட்சம் ஒரு குழு இருந்தால், அதிகமானோருக்கு வேலை கிடைக்கும்.

பெரும்பாலானப் பணியாளர்கள் பெண்களாக உள்ள நிலையில், அவர்களது சொந்த ஊர்களிலேயே அவர்கள் பணியாற்றலாம் என்பதால் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் மாற்றியமைத்துள்ளது. நீர் சேமிப்பு மற்றும் தூர்வாருதல் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உதவக்கூடியப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பெரும்பாலானப் பணிகள் சமுதாயத்திற்குப் பயனளிப்பதாக அமைந்துள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்