இலங்கையில் மறைந்த தோட்டத் தொழிலாளர்களின் தலைவரான செளமியமூர்த்தி தொண்டமானின் 108 வது பிறந்தநாளைக் கெளரவிக்க பாடத்திட்டத்தில் வரலாறு
இலங்கையில் மறைந்த தோட்டத் தொழிலாளர்களின் தலைவரான செளமியமூர்த்தி தொண்டமானின்
108 வது பிறந்தநாளைக் கெளரவிக்கும் முகமாக, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய வம்சாவளி மறைந்த தலைவர் செளமியமூர்த்தி தொண்டமானின் சாதனைகளை கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப் பரிந்துரை செய்துள்ளார்.
இப்பரிந்துரைக் கடிதத்தை இலங்கை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவிடம் கையளித்ததாக அவரது பேரனும் இலங்கையின் அமைச்சருமான செந்தில் தொண்டமான் இத் தகவலைத் தெரிவித்தார். காலம்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் (அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி,1999 ஆம் ஆண்டு மறைந்தார்) இலங்கை வாழ் தோட்டத் தொழிலாளர்களான இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராவார். 86 வது வயதில் இவர் இறந்த போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும் இலங்கை அரசின் அமைச்சரவையில் வயது கூடிய அமைச்சராகவும் காணப்பட்டார். இவர் தொடர்ந்து 21 வருடங்கள் இலங்கை பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார்.தொண்டமானின் தந்தையார்
தஞ்சாவூர் வழி வந்த கள்ளர் குல உட்பிரிவு தொண்டைமான் அதை பெயரில் கொண்டு பழைய இராமநாதபுரம் ஜில்லாவாக இருந்து தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திலுள்ள முத்துவடுகநாதபுரம் என்ற எம்.புதூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தார். எனினும் அவரது தந்தையின் காலத்தில் அவர்களது குடும்பம் ஏழ்மையில் வாடியது. இதனால் கருப்பையா இலங்கையில் கொட்டைவடி நீர் தரும் (கோப்பித்) தோட்டத்திலும் மற்றும் தேயிலைத் தோட்டத்துக்கும் வேலை செய்ய சென்றவர்களுடன் கூட, இலங்கைக்குச் சென்று அங்கு வேலை செய்து அவர்களின் தலைவராகி தொழிலாளர்களைக் கண்காணிப்பு செய்யும் கங்காணியாக உயர்ந்தார். பின்னர் இந்தியா திரும்பியவர் தமது கிராமத்தில் சீதாம்மை என்பரைத் 1903 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த முதல் பெண் குழந்தை சிறிது காலத்தில் இறந்தது. மறுபடி இலங்கை திரும்பிய கருப்பையா இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வெவண்டன் என்னும் தேயிலை தோட்டத்தை விலைக்கு வாங்கினார். ஒரு வருடத்துக்குப் பிறகு இந்தியா திரும்பிய கருப்பையாவுக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு ஐந்தாவது குழந்தையாக சௌமியமூர்த்தி 1913 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ல் பிறந்தார்.
சௌமியமூர்த்தியின் பிறப்புக்கு பின்னர் உடனடியாக இலங்கை திரும்பிய கங்காணி கருப்பையா, சௌமியமூர்த்தியின் ஏழாவது வயதில் தமது கிராமத்துக்கு திரும்பினார். அவ்வேளையில் தமது தந்தையாருடன் நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கை திரும்பிய கங்காணி கருப்பையா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சௌமியமூர்த்தியை இலங்கைக்கு தம்முடன் அழைத்துக் கொண்டார். 1924 ஆம் ஆண்டு தமது 11 வது அகவையில் இலங்கை வந்த சௌமியமூர்த்தி தமது 14 வது அகவை தொடக்கம் கம்பளை புனித அந்திரேயர் கல்லூரியில் சேர்ந்து கல்வி கற்றார்.
1927 ஆம் ஆண்டில், கம்பளை புனித அந்திரேய கல்லூரியில் சௌமியமூர்த்தி இணைந்த அதே வருடத்தில், மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தார். அவரின் உரைகளால் சௌமியமூர்த்தி மிகவும் கவரப்பட்டார். முக்கியமாக மகாத்மா மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தமது கண்டி உரையில் தோட்ட உரிமையாளர்கள் தங்களது தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களது தேவைகளைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டமையானது சௌமியமூர்த்தியின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலை இயக்கத்தில் சௌமியமூர்த்தி நாட்டம் அதிகமாக்கியது.
அச்சமயம் நோய்வாய்ப்பட்டிருந்த தந்தையார் அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தார். இதன்படி 1932 ஆம் ஆண்டு, இந்தியாவில் வசித்த சௌமியமூர்த்தியின் தாயாரும் சகோதரி இலட்சுமியும் பார்த்த பெண்ணான கோதை என்பவரோடு, மணமகன் இல்லாமலேயே சௌமியமூர்த்தியின் சகோதரி தாலிக்கட்ட திருமணம் முடிந்தது. அதே ஆண்டு இந்தியா திரும்பிய சௌமியமூர்த்தி ஒரு வருடமளவில் அங்கு தங்கியிருந்தார். அக்காலப்பகுதியில் அவரது மகன் இராமநாதன் பிறந்தார். பின்னர் குழந்தையையும் மனைவியையும் இந்தியாவில் விட்டுவிட்டு இலங்கை திரும்பிய சௌமியமூர்த்தி தந்தையாரின் உடல் நிலை பாதிப்பு காரணமாக வெவண்டன் தோட்ட நிர்வாகத்தை தானே பார்த்து வந்தார். 1939 ஆம் ஆண்டு உடல் நிலை மிக மோசமாக காணப்பட்ட கருப்பையாவின் வேண்டுகோளுக்கு இணங்க சௌமியமூர்த்தியின் மனைவி கோதையும் மகன் இராமநாதனும் இலங்கை வந்தனர். 1940 ஆம் ஆண்டில் கங்காணி கருப்பையா காலமானார். பின்னாளில் இராமநாதன் இலங்கை மத்திய மாகாண அமைச்சராக தேர்தெடுக்கப்பட்டார்..
கருத்துகள்