தேவூர் ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு வானம் தோண்டிய போது விலைமதிப்பற்ற 17 திருமேனிகள் கண்டெடுப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகில் உள்ள தேவூர் ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவில்


திருப்பணிக்கு வானம் தோண்டிய போது விலைமதிப்பற்ற  சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. தேவூரில் தேன்மொழி அம்பாள் உடனுறை ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. நான்காம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க கோவிலை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த திருப்பணிகள் நடைபெறுகிறது.இந்த நிலையில் கோவிலின் ஒரு பகுதியில் நவக்கிரக சிலைகள் வைக்க மண்டபம் கட்டுவதற்கு வானம் தோண்டப்பட்டது. அப்போது நான்கடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், சிலை இருந்த இடத்தை உடனடியாக மூடி வைத்து விட்டனர்.  
தகவலறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தை தொழிலாளர்கள் மீண்டும் தோண்டினர். அப்போது தோண்டத் தோண்ட அரை அடி முதல்  4 அடி வரையிலான 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதில் பெரும்பாலானவை அம்மன் சிலைகளாக இருந்தன. மேலும் தோண்டிய போது திருவாச்சி, சூலம், அடிபீடம், பத்திமடம், தண்ணீர் கடம் (சங்குவடிவில்) தூபம், தூபக்கால் என 40 பூஜை பொருட்களும் கிடைத்தது.பின்னர் அந்தச் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு. அவை கோவிலில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சிலைகள்  பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஸ்ரீ தேவபுரீஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கு வானம் தோண்டிய போது பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது இனிமேல் தொல்லியல் ஆய்வுகள் முடிவில் அதன் காலம் முடிவாகும்.திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில் கீவளூர் வந்து அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலையில் சென்றால் தேவூரை  வந்தயடையலாம்.தேவர்கள் வழிபட்டதால் தேவூர் அல்லது திருத்தேவூர் எனப் பெயர் மாடக்கோயில், கௌதமர், வியாழபகவான், இந்திரன், குபேரன், சூரியன்  வழிபட்டதாகவும். கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் என்பன தலத்தின் வேறு பல பெயர்கள் விருத்திரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட ஸ்தலம். குபேரன் வழிபட்டு சங்க, பதுமநிதிகளைப் பெற்றான். விராடன் தன் மகள் உத்தரையுடன் இங்கு வந்து இறைவனை வழிபட்டான். என்பது வரலாறு  கோவில் ஊர் நடுவிலுள்ளது.


ஸ்ரீ தேவபுரீஸ்வரர், என்ற கதலிவனேஸ்வரர், 

ஸ்ரீ மதுரபாஷிணி, என்ற தேன்மொழியம்மை. அருள் வழங்கும் 

ஸ்தல விருட்சம் - வெள்வாழை (வாழையில் ஒருவகை)

தீர்த்தம் - தேவதீர்த்தம்.

திருஞான சம்பந்தப் பெருமான் பாடல் பெற்ற ஸ்தலம்.

கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம். உட்புறத்தில் இடப்பால் அதிகார நந்தி தரிசனம். கவசமிட்ட கொடமரமும் நந்தி, பலிபீடம் காட்சி. கீழே உள்சுற்றில் அறுபத்துமூவர், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர். அகல்யை வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, எதிரில் கட்டுமலை மேல் கௌதமர் வழிபட்டலிங்கம், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன. நடராஜசபை தனியே அழகாக உள்ளது. கட்டுமலையின் அடிவாரத்தில் இந்திரன், முருகன் விநாயகர் சந்நிதிகள் பக்கத்துப் பக்கத்தில் உள்ளன.

வலம்முடித்துப் படிகளேறி மேலே - கட்டுமலைமீது சென்றால் நேரே சோமாஸ்கந்தர் தரிசனம். வலப்பக்கம் திரும்பி வாயிலைக் கடந்தால் மூலவர் காட்சி. சதுரபீடம் - ஆவுடையாரின் அளவை நோக்கச்சற்று சிறிய பாணம் - அருமையான தரிசனம். சுவாமி சந்நிதிக்கும் பக்கத்தில் அம்பாள் சந்நிதி - தனிக்கோயில். நின்ற திருக்கோலம். 6.9.1999ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் முயலகனில்லை - புதுமையான அமைப்பு. நாடொறும் ஐந்துகால பூஜைகள். வைகாசியில் பெருவிழா. பாண்டியர் காலக் கல்வெட்டு இவ்வூரை "அருண்மொழித் தேவ வளநாட்டுத் தேவூர்" என்றும், இறைவனை "ஆதித்தேச்சுரமுடையார்" என்றும் குறிப்பிடுகின்றது.

"பண்ணிலாவிய மொழி உமைபங்கன் எம்பெருமான்

விண்ணில் வானவர்கோன் விமலன் விடையூர்தி

தெண்ணிலா மதிதவழ் மானிகைத் தேவூர்

அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லம் ஒன்று இலமே." (திருஞான சம்பந்தப் பெருமான்)

"தேவூர்த் தென்பால் திகழ் தருதீவில்

கோவார் கோலம் கொண்ட கொள்கையும்" (திருவாசகம்)

அம்பாள் சந்நிதியில் காணப்படும் ஒரு பாடல்

"தீமருவு செங்கையான் திருத்தே வூர்வாழ் நாதன் தேவபுரீசுரரை வளரும்

காமருவு கதியின்பால் கருத்தர்தமைக் கௌதமரும் குபேரனோ டிந்திரன் தானும்

நாமருவு குருவுடனே சூரியனும் போற்றிசெயச் சம்பந்தர் பதிகமோத

மாமதுர பாஷணி மலர்க்கழலை மறுமையடு இம்மைக்கும் மறவேன் நானே."

(மு.ஆ.அருணாசல முதலியார் இயற்றியது)

"-நீளுவகைப்

பாவூரிசையிற் பயன் சுவையிற் பாங்குடைய

தேவூர் வளர்தேவ தேவனே." (அருட்பா வாகும்


நாம் 2013 ஆம் ஆண்டு பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் துவங்கிய போது முதல் வெளியீட்டு இதழ் இந்த ஸ்தலத்தில் வைத்து வாழிபாடு செய்த நிகழ்வு இப்போது நினைவு கூறத்தக்க நிகழ்வாகும் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்