சித்த மருத்துவம் வாழ்வியல் முறை சார்ந்தது. உணவே மருந்து என்ற கருத்தாக்கம் நெட்டப்பாக்கத்தில் நடந்தது
சித்த மருத்துவம் வாழ்வியல் முறை சார்ந்தது -நெட்டப்பாக்கம் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் அபர்ணாதேவி
சித்த மருத்துவம் வாழ்வியல் முறை சார்ந்தது. உணவே மருந்து என்ற கருத்தாக்கம் தமிழ் பாரம்பரிய வைத்திய முறையின் சிறப்பு அம்சம் ஆகும். சுற்றுச்சூழல் பாதிப்பால் நிறைய நோய்கள் மக்களைத் தாக்குகின்றன. கொரோனாவோடு இப்போது டெங்கும் பரவி வருகின்றது. ஆங்கில மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகள் எதிரானவை அல்ல. மாறாக ஒன்றை ஒன்று நிறைவு செய்பவை. நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார எல்லைக்குள் ஒரு மாதமாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. தற்போது தினமும் ஓரிரண்டு புதிய தொற்று ஏற்படுகின்றது. மூன்றாவது அலையை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது மாரத்தான் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜி.அபர்ணாதேவி கேட்டுக்கொண்டார்.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் நெட்டப்பாக்கம் கருணாலயம் கிராம நலச் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று (03.09.2021) நெட்டப்பாக்கத்தில் நடத்திய நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போது டாக்டர் அபர்ணாதேவி இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டின் பெருவிழாவையொட்டி ஆயுஷ் அமைச்சகம் நாடு முழுவதும் இந்திய மருத்துவ முறைகளில் உள்ள மிக முக்கியமான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் அமுக்கரா சூரண மாத்திரை வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கிராம மக்களுக்கு இம்மாத்திரைகளை வழங்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் இரத்தினமாலா தனது உரையில் இம்மருந்து அமுக்கரா, கிராம்பு, சிறுநாகம்பூ, சுக்கு, மிளகு, ஏலக்காய், திப்பிலி ஆகிய 7 மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட கூட்டு மருந்தாகும் எனத் தெரிவித்தார். இம்மருந்து வயிற்றுப் புண், ரத்தசோகை, நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, முதியோரின் மறதி ஆகியவற்றுக்கு பயன்படுவதோடு பொதுவான நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் லாவண்யா மற்றும் நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் டாக்டர் சிவசங்கரி ஆகியோர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள் குறித்து உரையாற்றினர்.
கருணாலயம் கிராம நலச் சங்க செயலாளர் திரு.ப.அங்காளன் கருத்துரை ஆற்றினார். இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக மாத்திரைகளை அலட்சியப்படுத்த வேண்டாம். இந்த தொற்று காலத்தில் பலமுறைகளிலும் நோய் எதிர்ப்புச் சக்தியை நாம் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று அங்காளன் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். குழந்தைகளை எந்தவிதமான தொற்று நோய்களும் பாதிக்காமல் இந்த காலகட்டத்தில் பார்த்துக் கொள்வது முக்கியமானது ஆகும். மூன்றாம் அலை வருகின்றதோ இல்லையோ குழந்தைகளை தேவையில்லாமல் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். குழந்தைகளுக்கு அட்டவணைப்படி அனைத்து தடுப்பு மருந்துகள் போடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.
கருணாலயம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திருமிகு புஷ்பவல்லி நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கள விளம்பர உதவியாளர் திரு. மு.தியாகராஜன் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சிகள் மடுகரை மற்றும் பண்டசோழநல்லூர் ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டன.
கருத்துகள்