கடலூர் சாக்காங்குடியில் பாரம்பரிய உணவு மற்றும் மூலிகை கண்காட்சி

பாரம்பரிய உணவு மற்றும் மூலிகை அறிவை பரவலாக்க வேண்டும்


-கடலூர் கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் வலியுறுத்தல்

ஆரோக்கியம் தொடர்பான நமது முன்னோர்களின் பாரம்பரிய அறிவு அனுபவங்களின் செறிவாக அமைந்துள்ளது.  உணவு என்றாலே அது ஊட்டச்சத்தானதாகவும் மருந்தாகவும் நம் பண்பாட்டில் இருந்துள்ளது, ஒவ்வொரு கிராமத்திலும் நூற்றுக்கும் அதிகமான மருத்துவ மூலிகைகள் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொண்டு கிராம மக்கள் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளும் கர்ப்பிணிப் பெண்களும் பாரம்பரிய உணவுகளை உண்ண வேண்டும். இங்கு அமைக்கப்பட்டுள்ள மூலிகை மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி மிகச் சிறப்பாக உள்ளது. இக்கண்காட்சிகளை எல்லா கிராமங்களிலும் நடத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டுடன் எந்த ஒரு குழந்தையும் வளரக்கூடாது என்று நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  கடலூர் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)  பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.


புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கீரப்பாளையம் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் ஆகியன இணைந்து சுகாதாரத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இன்று  சாக்காங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடத்திய ஊட்டச்சத்து மாத விழா சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)  பவன்குமார் ஜி. கிரியப்பனவர் வலியுறுத்தினார்.


 நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர்  தே.கனிமொழி தேவதாஸ் படையாண்டவர் தலைமை வகித்தார். சாக்காங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் . சி.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

கீரப்பாளையம் வட்டார நடமாடும் மருத்துவக்குழு மருத்துவ அலுவலர் டாக்டர் இ.லாவண்யா கர்ப்பிணிகள் பயமோ தயக்கமோ இல்லாமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் . ரெ..சுடர்க்கொடி கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்துணவுகள் குறித்து உரையாற்றினார்..

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ல.ரவிச்சந்திரன், மற்றும் .வ.ரா.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)  பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கியதோடு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்புக்கான பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கினார்.

முன்னதாக வேலூர் ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவ சமூக சேவை மையத்தின் சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் மூலிகை முக கவசங்களும் மூலிகை கன்றுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அங்கன்வாடிப் பணியாளர்கள் சார்பில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் கண்காட்சியும் ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவ சமூக சேவை மையத்தின் சார்பில் மருத்துவ மூலிகை கண்காட்சியும் அமைக்கப்பட்டு இருந்தன. வேலூரில் இருந்து வந்து நிகழ்ச்சிக்கு உதவியதற்காக வைத்தியர் ப.ராஜா, வைத்தியர் செல்வி அருச்சுனன் மற்றும் வைத்தியர் பூங்காவனம் ஆகியோருக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரெ..சுடர்க்கொடி பாராட்டு தெரிவித்து கதராடை அணிவித்தார்.

பின்னர் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி)  பவன்குமார் ஜி. கிரியப்பனவர் மரக் கன்றுகளும் நட்டார். ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு வாகனத்தையும் அவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர்.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா