மாணவிகள் இரத்தசோகை நோய்க்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் வலியுறுத்தல்
மாணவிகள் இரத்தசோகை நோய்க்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு வலியுறுத்தல்
வளரிளம் பெண்களுக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இரத்த சோகை நோய் ஏற்பட்டால் அது அவர்களைப் பெரிதும் பாதிக்கும். இது தொற்று நோய் அல்ல. நமது உணவு பழக்கத்தாலும் வாழ்வியல்முறை மாற்றத்தாலும் ஏற்படும் குறைபாடுதான். இதனை தவிர்க்கவும் தடுக்கவும் முடியும். சுவைக்கு அடிமையாகாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிலும் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்க முடியும். மாணவிகள் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு சிறுதானியங்களில் செய்த பலகாரங்களைச் சாப்பிடப் பழக வேண்டும். அதேபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டால்தான் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். 100 % மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமமாக இக்கிராமம் மாற வேண்டும் என்று கடலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.அதியமான் கவியரசு கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் ஆகியன இணைந்து இன்று (13.10.2021) முற்பகல் சி.என். பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடத்திய “ ஊட்டச்சத்து மூலம் இரத்தசோகை நோயைத் தடுத்தல், கோவிட்-19 தடுப்பூசி, டெங்கு கட்டுப்பாடு, சிறுசேமிப்பு, தூய்மை இந்தியா இயக்கம் & இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமுதப் பெருவிழா ” ஆகியன குறித்த விழிப்புணர்வு முகாமில் சிறப்புரை ஆற்றியபோது திரு. அதியமான் கவியரசு இவ்வாறு தெரிவித்தார்.
மாணவர்களும் மாணவிகளும் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரின் பங்கேற்பும் முக்கியம். கொரோனா காலகட்டத்தில் பல்வேறு துறையினரின் செயல்பாடுகள் பாராட்டத் தக்கவையாக இருந்தன. அதிலும் தூய்மைப் பணியாளர்களின் பணி தொற்றுக் காலத்தில் பெரும் சேவையாக இருந்தது. அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்று திரு. அதியமான் கவியரசு மேலும் தெரிவித்தார்.
ஊராட்சி மன்றத் தலைவர் திருமிகு வே.மங்களம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் திரு.சீ.முருகன் தலைமை வகித்தார். அஞ்சல் துறை பல்வேறுவிதமான சேமிப்பு மற்றும் காப்புறுதி திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. பெண் குழந்தைகளைக் காப்போம்-பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அஞ்சல் துறை பிரபலப்படுத்தி வருகின்றது. ஒவ்வொருவரும் தங்களது வருமானத்துக்கும் எதிர்காலத் தேவைக்கும் ஏற்ப ஏதாவது ஒரு திட்டத்தில் சேரலாம் என்று திரு. முருகன் தெரிவித்தார்.
மாவட்ட மலேரியா அலுவலர் திரு.ரா.கஜபதி சிறப்புரை ஆற்றினார். டெங்கு உட்பட கொசுவால் பரவும் நோய்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதில் பொது மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்த மழைக் காலத்தில் வீடுகளில் எந்த வகையிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த காய்ச்சல் என்றாலும் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும் என்று திரு.ரா.கஜபதி கேட்டுக் கொண்டார்.
திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அமிர்தாதேவி கர்ப்பிணிப் பெண்களும் பாலூட்டும் தாய்மார்களும் கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்து உரையாற்றினார்.
குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமிகு ஆ.கோமதி, பள்ளித் தலைமையாசிரியை திருமிகு பெ.அமுதா, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் திரு.ஆர்.முத்துக்கிருஷ்ணன் ஆகியோரும் உரையாற்றினர்.
அஞ்சல் துறை மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை வருவாய் கோட்டாட்சியர் திரு.அதியமான் கவியரசு திறந்து வைத்துப் பார்வையிட்டார். ஆரோக்கியக் குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் திரு.அதியமான் கவியரசு பரிசுகள் வழங்கினார். பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் திரு.அதியமான் கவியரசு கைத்தறி துண்டு அளித்து கெளரவப்படுத்தினார். உலக கைகழுவும் தினத்தையொட்டி முறையாக கை கழுவுதல் எப்படி என்றும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது அமுதப் பெருவிழா பேக்கட் அட்டையும் அதற்கான வாசகங்கள் அச்சிட்ட துணிப் பைகளும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன்.
முன்னதாக மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு மு. தியாகராஜன் நன்றி கூறினார்.
கருத்துகள்