கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்க தனியார் துறையினர் அரசுடன் கைக்கோர்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்
குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்க தனியார் துறையினர் அரசுடன் கைக்கோர்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர்
கிராமப்புறங்களில் நவீன புற்றுநோய் சிகிச்சை வசதிகளை வழங்குவதற்கு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட தனியார் துறைக்கு குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் எட்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு துணைத்தலைவர், இன்று காலை கவுஹாத்தி வந்தார். ஆளுநர், முதல்வர் மற்றும் இதர பிரமுகர்கள் அவரை வரவேற்றனர்.
மாநில புற்றுநோய் மையத்தில் பெட்-எம்ஆர்ஐ பிரிவை துவக்கி வைத்து பேசிய அவர், மிகவும் துல்லியமான நோயறிதலுக்கு இது பெரிதும் உதவுவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் மீது கதிர்வீச்சின் வெளிப்பாட்டையும் குறைக்கும் என்று கூறினார். டைம்-ஆஃப்-ஃப்ளைட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த இயந்திரம் இந்தியாவில் நான்காவது ஆகும்.
பகிரப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மாதிரி எனப்படும் ஸ்டாப் டவுன் முறையை குறிப்பிட்ட அவர், டாடா அறக்கட்டளைகளுடன் இணைந்து அசாம் அரசு இதை செயல்படுத்த முனைகிறது என்றார். புற்றுநோய் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பயனுள்ள சிகிச்சையை வழங்க இம்முறையை பின்பற்றுமாறு மற்ற மாநிலங்களை அவர் அறிவுறுத்தினார்.
பகிரப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு முறையின் கீழ், எல் 1 என்றழைக்கப்படும் ஒரு மேல்நோக்கு பரிந்துரை மையம், எல் 2 எனப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட விரிவான புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் எல் 3 எனப்படும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள கதிர்வீச்சு வசதியுடன் கூடிய நோயறிதல் மற்றும் சிகிச்சை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புற்று நோயாளிகளின் சிகிச்சையை கையாளும் ஒரு தலைமை மருத்துவமனைக்குப் பதிலாக, தரமான மற்றும் மலிவு விலையில் நோயாளிகளின் வீடுகளுக்கு அருகில் சிகிச்சை வழங்கும் புற்றுநோய் மையங்களை உருவாக்கும் நோக்கம் குறித்து பேசிய திரு நாயுடு, அவை உயர்தர சிகிச்சையை நோயாளிகளின் வீடுகளுக்கு அருகிலேயே வழங்கி, அவர்களின் செலவுகளைக் குறைக்கும் என்றார்.
வலி நிவாரண சிகிச்சை என்பது அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களின் அதிக கவனம் தேவைப்படும் ஒரு முக்கியமான பகுதி என்று குடியரசு துணைத்தலைவர் கூறினார். வலி நிவாரண சிகிச்சை என்பது நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயல்கிறது, என்று அவர் மேலும் கூறினார்.
நோய்களைத் தடுப்பதன் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்துவதற்காக பள்ளி பாடத்திட்டத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்த பாடங்களை அனைத்து மாநில அரசுகளும் சேர்க்க வேண்டும் என்று திரு நாயுடு வலியுறுத்தினார். 'வாழ்க்கை முறை நோய்கள்' குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய பிரச்சாரத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
கொவிட் -19 தொற்றுநோய் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது, அவற்றில் முதன்மையானது நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதும் ஆகும். ஒழுக்கமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், உடபயிற்சிகளை மேற்கொள்வது, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்ப்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். "உண்மையில், புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்களைத் தடுப்பதில் அவை முக்கியமானவை" என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
கொவிட் காலத்தில் வழங்கிய சேவைகளுக்கு அசாம் அரசு மற்றும் மாநிலத்தின் மருத்துவ சமுதாயத்தை அவர் பாராட்டினார். மேலும், மருத்துவ சேவையை சாதாரண மக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மலிவு விலையில் கிடைக்கச் செய்யவும் அவர் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்ற பிரதமரின் அறைகூவலை அவர் சுட்டிக்காட்டினார்.
பின்னர், அறிவியல், இலக்கியம், கல்வி, விளையாட்டு, இசை மற்றும் கலைத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அசாமை சேர்ந்த 20 முக்கிய நபர்களுடன் குடியரசு துணைத்தலைவர் உரையாடினார்.
சாதனையாளர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, கவனம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், தமது துறைகளில் சிறந்து விளங்கிய உண்மையான கர்மயோகிகள் என்று அவர்களை பாராட்டினார். "மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் மாறிவிட்டீர்கள், இளைஞர்கள் சிறந்ததை அடைய உங்கள் வாழ்க்கை ஊக்குவிக்கிறது" என்று அவர் அவர்களிடம் கூறினார்.
இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை என்று கூறிய திரு நாயுடு, குரு-சிஷ்ய பாரம்பரியத்தின் உண்மையான உணர்வில் தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுமாறு சாதனையாளர்களை கேட்டுக்கொண்டார். பிரம்மாபுத்ராவில் உள்ள பாரம்பரிய மையத்தில் முன்பு தாம் கண்ட ‘பிஹு அடோரோனி’ என்ற கலாச்சார நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுகையில், அசாமின் அழகிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தம்மை ஈர்ப்பதாக திரு நாயுடு கூறினார்.
அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜெகதீஷ் முகி, அசாம் முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், திரு கேஷாப் மஹந்தா, அசாம் தலைமை செயலாளர் திரு ஜிஷ்ணு பருவா மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்