தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்


தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்


சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெரு விழாவின் ஒரு பகுதியாக இந்தியாவின் முன்னேற்றத்தையும் அதன் புகழ் மிக்க வரலாற்றையும் கொண்டாடவும், நினைவுகூரவும் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் உணவுப் பாதுகாப்பு அருங்காட்சியகத்தோடு புகைப்படக் கண்காட்சியை திங்களன்று மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சர் திரு.பியூஷ் கோயல் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


இந்திய உணவுக்கழகம் நாட்டிலேயே முதலாவதாக இந்த உணவு அருங்காட்சியகத்தை தஞ்சாவூரில் உருவாக்கியுள்ளது. 56 ஆண்டுகளுக்கு முன்னர் 1965-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி இந்திய உணவுக் கழகம் தொடங்கப்பட்டதும் தஞ்சாவூரில் தான் என்பது நினைவு கூரத்தக்கது. இந்திய உணவுக்கழகத்தின் முதல் அலுவலகம் அப்போது தொடங்கிவைக்கப்பட்டது.


இந்த உணவு அருங்காட்சியகத்தை இந்திய உணவுக் கழகமும், பெங்களுரிலுள்ள விஸ்வேஸ்வரய்யா தொழிலியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகங்களும் இணைந்து ரூ. 1.1 கோடி செலவில் 1860 சதுர அடி பரப்பில்   உருவாக்கியுள்ளன. பழங் கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உணவுப் பொருள் எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதிலிருந்து, பண்டைக் கால மனிதர்களால் எதிர்கொள்ளப்பட்ட பல்வேறு சேமிப்பு வழிமுறைகள் மற்றும் சவால்கள் வரையிலான தகவல்கள் பரிமாற்றம் மற்றும் கோட்பாடு அடிப்படையில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக்கழகத்தின் வரலாறு, கொள்முதல், இருப்பு வைத்தல், பாதுகாத்தல், கொண்டு செல்லுதல், விநியோகம் தொடர்பான பல முக்கிய தகவல்களையும் இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின் வரலாற்றுப் பயணம் அதன் தற்போதைய செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல் அம்சங்கள் டிஜிட்டல் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்திற்கு செல்ல நுழைவு கட்டணம் இல்லை.


தஞ்சாவூரில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சக செயலர் திரு சுதன்சு துபே, இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு ஆதிஸ் சந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா