முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான. 60 இடங்களில் நடந்த சோதனை

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட நிலையில், இன்று முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களான நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 60 இடங்களில் சோதனை நடைபெற்றது.


சென்னையில் 14 இடங்களிலும், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை, கர்நாடகா, ஆந்திரா என மொத்தம் 60 இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. மேலும் கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதேபோல், சேலம் ரெட்டிபட்டியிலுள்ள அஷ்வா பார்க் ஹோட்டல் மற்றும் அதன் உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வசந்தி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே செங்குட்டையில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.தங்கமணியின் மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது 4.85 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. மேலும்,  தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்கமணி அமைச்சராக இருந்த 23.05.2016 முதல் 06.05.2021 தேதி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது தங்கமணி, அவருடைய மகன் தரணிதரன், அவருடைய மனைவி சாந்தி ஆகியோர் பெயரில் 1,01,86,017 ரூபாய் சொத்து இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் 8,47,66,318 ரூபாய் சொத்து இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இதனால் 7,45,80,301 ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் அதிகரித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.செலவினம் போக 4,85,72,019 ரூபாய் சொத்து சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது சோதனையில் 2,37,34,458 ரூபாய் பணம், 1.13 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் கணக்கில் வராத 2,16,37,000 ரூபாய் பணம், சான்று பொருட்களான கைபேசிகள் பல வங்கி பாதுகாப்பு பெட்டகங்ககளின் சாவிகள், கணினிகளின் ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்று லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்