புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பிலான தேசிய இளைஞர் திருவிழாக் கருத்தரங்கு

 சமுதாயத்துக்கு சேவை ஆற்ற மாணவர்கள் முன்வர வேண்டும் -துணைவேந்தர் மோகன் வேண்டுகோள்


மாணவர்கள் படிப்பு, வேலை, குடும்பம் என்று தம் வாழ்க்கையைக் குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளக்கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும்.  அதைவிட சமுதாயத்துக்கு சேவை புரிய முன்வர வேண்டும். ஆழ்ந்த அறிவு, கூர்மையான சிந்தனை, ஆக்கப்பூர்வமான பயன்பாடு என்ற மூன்று அம்சங்களையும் பொறியியல் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். சமுதாயத்துக்குப் பயன்படக்கூடிய புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.   நாம் இயற்கையைத் தெரிந்துகொண்டதும் அதில் இருந்து கற்றுக் கொண்டதும் மிகவும் குறைவுதான். இயற்கையில் இருந்து கற்றுக் கொள்ள இன்னமும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. உயிர்களை ஒத்த ஆக்கங்கள் என்று சொல்லப்படும் உயிரனையாக்கத்தில் (BIOMIMETICS) மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.  உள்ளூர் தொழில்நுட்பத்துக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகத் துணைவேந்தர் பேராசிரியர் ச.மோகன் மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழக நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து இன்று(13-01-2022) முற்பகல் காணொலி வழி நடத்திய புதிய இந்தியாவின் உருவாக்கத்தில் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பிலான தேசிய இளைஞர் திருவிழாக் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியபோது துணைவேந்தர் மோகன் இவ்வாறு குறிப்பிட்டார்.

சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் தலைமையுரை ஆற்றினார். சிந்தனைகள்தான் ஒரு மனிதரை உருவாக்குகின்றன. நாளைக்கு நாம் எப்படி இருப்போம் என்பதை இன்றைய சிந்தனைகளே முடிவு செய்கின்றன. என்வே சிந்தனை நற்சிந்தனையாக, தனக்கும் சமுதாயத்துக்கும் ஒருசேர பலன் அளிக்கும் சிந்தனையாக இருக்க வேண்டும்.  சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களையும் தத்துவத்தையும் மாணவர்கள் படித்தால் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொள்ளலாம் என காமராஜ் தெரிவித்தார்.

கவிஞரும் புதுச்சேரி அகில இந்திய வானொலியின் அறிவிப்பாளருமான திருமிகு உமா மோகன் தனது சிறப்புரையில் இந்திய விடுதலைப் போராட்டம் என்பது சமூகச் சீர்திருத்தம் சார்ந்ததாகவே இருந்தது. பெண்கள் பங்கேற்பு மிகவும் குறிப்பிடத்தக்க அள்வில் இருந்தது. சுயநலம் பார்க்காத தலைவர்களின் தியாகம்தான் நமக்கு சுதந்திர இந்தியாவைப் பெற்றுத் தந்தது.  அதேபோல இன்றைய இளைஞர்கள் சுய நலம் பார்க்காமல் நாட்டு முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும் என்று உமாமோகன் கேட்டுக் கொண்டார்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைகழகப் பேராசிரியர் டாக்டர் க. நாகராஜன் தனது சிறப்புரையில் சுவாமி விவேகானந்தரிடம் இருந்து மாணவர்கள் நவீனத்துவச் சிந்தனையையும் மகாகவி பாரதியாரிடம் இருந்து இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்ற இலக்கை நோக்கிய விடாமுயற்சியையும் கற்றுக் கொள்ள வேண்டும். அரவிந்தரிடம் இருந்து அறிவாற்றலையும் ஞானத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  இவற்றோடு பொது நலன் சார்ந்து வாழ்ந்தால் அந்த வாழ்க்கை அர்த்தம் மிகுந்ததாக இருக்கும் என்று தெரிவித்தார்.புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகத்தின் துணை இயக்குனர் டாக்டர் தி.சிவக்குமார் தனது வரவேற்புரையில் இந்தியா இளமையான நாடாக இருக்கின்றது. இந்திய மக்கள் தொகையில் 65 சவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள். இன்றைய இளைஞர்கள் சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047-ஐ இலக்காகக் கொண்டு உழைத்தால் இந்தியா உலகில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார்.


புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன் தொகுப்புரை வழங்கினார். நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என்.பி.சுப்ரமணியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.மு.தியாகராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்