இளைஞர்களிடம் சேவை உணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது: குடியரசு துணைத்தலைவர்

இளைஞர்களிடம் சேவை உணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது: குடியரசு துணைத்தலைவர்


சமூகசேவையைப் பள்ளிகள் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கூறியுள்ளார்

இளம் வயதிலிருந்தே இளைஞர்களிடம் சேவை உணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இயல்புநிலை திரும்பிய பின்  சமூகசேவையைப் பள்ளிகள் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் மன்னானம் என்ற இடத்தில் துறவி சவராவின் 150-வது பிறந்தநாளைக் குறிக்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு சமூகசேவையை மாணவர்களுக்குக் கட்டாயமாக்குவது மற்றவர்களுடன் மாணவர்களின் கலந்துரையாடலையும் பகிர்தல் மற்றும் கவனம் செலுத்தும் மனப்போக்கையும் மேம்படுத்த உதவும் என்றார். பகிர்தல் மற்றும் பேணுதலின் தத்துவம் தொன்மையான இந்திய கலாச்சாரத்தின் மையம் என்றும் இதனை விரிவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் திரு நாயுடு வற்புறுத்தினார்.


 நாட்டில் ஒவ்வொருவரும் அவருக்கான சமய நம்பிக்கையைக் கடைப்பிடிக்கவும், அது பற்றி எடுத்துரைக்கவும் உரிமை கொண்டிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர், “உங்களின் சமயத்தைக் கடைப்பிடிக்கும் அதே நேரம் பேச்சிலும், எழுத்திலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடாது” என்றார். மற்ற சமயங்களை கேலி பேசுவது, சமூகத்தில் வேற்றுமைகளை உருவாக்குவது என்ற முயற்சிகளை அவர் நிராகரித்தார்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சும், எழுத்துக்களும் கலாச்சாரத்திற்கு, பாரம்பரியத்திற்கு, மரபுகளுக்கு, அரசியல் சட்ட உரிமைகளுக்கு, நெறிமுறைகளுக்கு எதிராக இருப்பதை எடுத்துரைத்த திரு நாயுடு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் மதச்சார்பின்மை இருப்பதாகவும் இந்தியா அதன் கலாச்சாரத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் உலகம் முழுவதும் மதிக்கப்படுவதாகக் கூறினார்.

 இந்திய கலாச்சார மாண்புகளை இளைஞர்கள் மனதில் பதித்து, பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மற்றவர்களுக்காக வாழ்வது ஒருவருக்கு  ஏராளமான திருப்தியைத் தருவது மட்டுமின்றி அவரது நல்ல செயல்களுக்காக நீண்ட காலத்திற்கு அவரை மக்கள் நினைவுகூரவும் செய்கின்றன என்று கூறினார்.

 துறவி சவராவுக்குப் புகழாரம் சூட்டிய திரு நாயுடு, கேரளாவின் இந்த ஆன்மிக சமூக அடையாளமான தலைவரை அவரின் வாழ்நாளில் மக்கள் துறவியாகக் கருதினர் என்றார்.  19-ம் நூற்றாண்டில் கேரள சமூகத்தின் ஆன்மிக, கல்வி, சமூகம், கலாச்சார துறைகளில் சீர்திருத்தவாதியாக விளங்கிய துறவி சவரா மக்களின் சமூக மறுமலர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பை செய்துள்ளார் என்று அவர் கூறினார்.

 தொலைநோக்குப் பார்வை கொண்ட சிந்தனையாளரும், செயற்பாட்டாளரும், சீர்திருத்தவாதியுமான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவால் உருவாக்கப்பட்ட தத்துவமாக அந்தியோதயா இருக்கும் நிலையில் வளர்ச்சியின் பயன்களை நமது சமூக-பொருளாதார ஒழுங்கில் மிகவும் பின்தங்கிய மற்றும் வறுமையுற்ற பெரும்பாலான மக்களின் கடைசி மனிதருக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்று திரு வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.


 வெளியுறவு இணையமைச்சர் திரு வி முரளீதரன் கேரள அரசின் கூட்டுறவு மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு வி என் வாசவன், முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு உம்மன்சாண்டி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்