வேளாண்மைப் பொருட்கள் ஏற்றுமதி குறித்த இணையவழி கருத்தரங்கு

 வேளாண்மைப் பொருட்கள் ஏற்றுமதி குறித்த இணையவழி கருத்தரங்கு


சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏபிஇடிஏ) தமிழ்நாடு ஏற்றுமதியாளர்களுக்கான வேளாண் ஏற்றுமதிகள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. 2022 ஜனவரி 4 அன்று இணைய வழியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை ஏபிஇடிஏ தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குனர் டாக்டர் எம் கே சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசு செயலாளர் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்கள்  ஆணையர் திரு சி சமயமூர்த்தி நபார்டு வங்கியின் சென்னை பிரிவு தலைமை பொது மேலாளர் திரு டி வெங்கடகிருஷ்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த இணைய வழி கருத்தரங்கில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியோடு தொடர்புடைய மத்திய அரசு, மாநில அரசு முகமைகள் ஏற்றுமதியாளர்கள், ஏற்றுமதியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இந்த கருத்தரங்கில் பேசிய டாக்டர் எம் அங்கமுத்து, மாநிலத்தில் இருந்து ஏற்றுமதி அதிகரிக்க உற்பத்தி பொருட்களை மையமாக கொண்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி தற்போது குறைவாக உள்ளது என்று கூறிய அவர் இதனை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பிட்ட பிரிவினருக்கு திறன் மேம்பாட்டு திட்டத்தையும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த அனைத்து ஆதரவும் அளிக்கப்படும் என  அவர் உறுதியளித்தார். நபார்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், சிறு விவசாயிகள் வேளாண்வணிக கூட்டமைப்பு, இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்துதல் சம்மேளனம் ஆகியவற்றின் உதவியுடன் இதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று டாக்டர் அங்கமுத்து தெரிவித்தார்.

 கருத்தரங்கில் பேசிய தமிழ்நாடு அரசு செயலாளரும், வேளாண் உற்பத்தி பொருட்கள் ஆணையருமான திரு சி சமயமூர்த்தி, தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதிக்கு உகந்தவையாக பழங்கள், காய்கறிகள், அரிசி, பருப்பு வகைகள், மல்லிகைப்பூ, உதிரிப்பூக்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், இயற்கை முறையிலான உணவுப் பொருட்கள், மூலிகைகள் உள்ளன என்றார். ஏற்றுமதியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்துவோருக்கு சென்னையில் கவுன்சில் அமைப்பு மதுரையில் முருங்கைக்கான ஏற்றுமதி மையம் போன்று விவசாயிகளுக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் முன் முயற்சிகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

 தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான உத்திகள் பற்றியும்  இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

ஏபிஇடிஏ சென்னை மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்