இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் 13-வது ஆண்டு தின விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்
புதுதில்லியில் இந்திய வணிகப் போட்டி ஆணையத்தின் 13-வது ஆண்டு தின விழாவில் மத்திய நிதி மற்றும் பெருவணிக நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
இதனையொட்டி மத்திய நிதியமைச்சர் கொல்கத்தாவில் மண்டல அலுவலகத்தை தொடங்கிவைத்ததுடன், வணிகப் போட்டி ஆணையத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தையும் துவக்கிவைத்தார். கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஆணையத்தின் கையேடுகளையும் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெருந்தொற்று காலத்தில் ஒழுங்குமுறை பணி தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் இந்திய வணிகப்போட்டி ஆணையம் சரியான நேரத்தில் முன்முயற்சிகளை எடுத்ததை பாராட்டினார். வணிகப் போட்டி ஆணையத்தின் தலைமையையும் பாராட்டிய அவர், அமிர்த காலத்தில் இந்தியாவை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்ல வாழ்த்து தெரிவித்தார்.
போட்டியின் பொது கொள்கை இலக்கை எட்ட மூன்று முக்கிய செயல்பாடுகளை திருமதி சீதாராமன் வலியுறுத்தினார். மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த நிறுவனங்கள் தங்களை வளர்த்து கொள்வது அவசியம் என்று கூறினார்.
உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இடுபொருட்கள் விலைகள் உயர்ந்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், அதனை சமாளிக்க உள்நாட்டிலும், ஏற்றுமதியிலும் தேவைகளை பூர்த்தி செய்யும் திறனை இந்தியா பெற்றுள்ளதாக தெரிவித்தார். பெருந்தொற்று, தற்போது கிழக்கு ஐரோப்பாவில் நடைபெறும் போர் ஆகியவற்றின் காரணமாக உலகளவில் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறிய அவர், விநியோக சங்கிலி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை சரிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்
கருத்துகள்