இந்தியாவின் 25 வது தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றார்
மே 12 ஆம் தேதியிட்ட இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிப்பின்படி, புது தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் திரு ராஜீவ் குமார் இன்று இந்தியாவின் 25வது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திரு ராஜீவ் குமார் 2020 செப்டம்பர் 1 முதல் தேர்தல் ஆணையராகப் பணியாற்றி வருகிறார். அவர் தேர்தல் ஆணையராக இருந்த காலத்தில், 2020 ஆம் ஆண்டில் பீகார், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டசபைகளுக்கு கோவிட் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 2021 மார்ச்-ஏப்ரல் மாதத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது.
தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, திரு ராஜீவ் குமார், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய மிகச்சிறந்த நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பு தமக்குக் கிடைத்திருப்பது பெருமையளிப்பதாகக் கூறினார். நமது குடிமக்களுக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கும், வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதிப்படுத்துவதற்கும், முறைகேடுகளைத் தடுப்பதற்கும், நமது தேர்தல்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் கடந்த எழுபது ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. "அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பொறுப்பான எந்தவொரு பெரிய சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதில் ஆலோசனைகள் மற்றும் ஒருமித்த கருத்தை உரிய நேரத்தில் உருவாக்குவதற்கான ஜனநாயக முறைகளை ஆணையம் பின்பற்றும், கடுமையான முடிவுகளை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் தயங்காது" என்று அவர் மேலும் கூறினார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் எளிதாக வாக்காளர் சேவைகளை கொண்டு வருவதற்கான செயல்முறைகள் மற்றும் தேர்தல் நடைமுறைகளை எளிதாக்குவதற்கு தொழில்நுட்பம் மேலும் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படும் என்று திரு ராஜீவ் குமார் கூறினார்.
கருத்துகள்