ஆதார் அட்டையின் நகலை நிறுவனங்களிடம் பகிர வேண்டாம்: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை
ஆதார் அட்டையின் நகலை நிறுவனங்களிடம் பகிர வேண்டாம்: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை
எந்த ஒரு நிறுவனத்திடமும் ஆதார் அட்டையின் நகலை பகிர வேண்டாம் என்றும், அதனை தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மாற்றாக, ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும் வகையில் மறைக்கப்பட்ட (மாஸ்க்ட்) ஆதாரை பயன்படுத்துமாறும், இதனை https://myaadhaar.uidai.gov.in என்ற இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் “Do you want a masked Aadhaar” என்பதை தெரிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம்.
இது தொடர்பாக அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்ற இணையதளத்தில் ஆதார் எண்ணை சரி பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்ஆதார் (mAadhaar) செல்பேசி செயலியில் உள்ள கியூ ஆர் கோட் ஸ்கேனரைப் பயன்படுத்தி இ-ஆதார் அல்லது ஆதார் கடிதம் அல்லது ஆதார் அட்டையில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தும் எண்ணை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இணைய சேவை மையத்தில் உள்ள பொது கணினியில் இ-ஆதார் பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்றும், எனினும் அவ்வாறு பதிவிறக்கம் செய்தால் சம்பந்தப்பட்ட கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்த ஆதார் தகவல்கள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்திலிருந்து உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் மட்டுமே ஒருவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம் என்றும், உரிமம் வழங்கப்படாத உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆதார் அட்டையின் நகலை வாங்கவோ, சேமிக்கவோ அனுமதி இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது ஆதார் சட்டம் 2016-இன் கீழ் குற்றமாகும். ஏதேனும் ஒரு தனியார் நிறுவனம் மக்களின் ஆதார் அட்டையை காணவோ அல்லது நகலைத் தருமாறோ கோரிக்கை விடுத்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறும் அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.ஆதார் பகிர்வு பிரச்சனை குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகம் மே 27-ந்தேதி தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பையொட்டி இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.
போட்டோஷாப் செய்யப்பட்ட ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்த முயற்சித்த பின்னணியில் இது அவர்களால் வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. மக்கள் தங்கள் ஆதாரின் புகைப்பட நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், ஏனெனில் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அந்த வெளியீட்டில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டுமே தெரியும் மறைக்கப்பட்ட (மாஸ்க்ட்) ஆதாரைப் பயன்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இருப்பினும், பத்திரிகை செய்தியை தவறாகப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, அது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும் பகிர்வதிலும் சாதாரண நடைமுறையைக் கடைப்பிடிக்க மட்டுமே அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆதார் அடையாள அங்கீகார சூழல் அமைப்பு ஆதார் வைத்திருப்பவரின் அடையாளம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு போதுமான அம்சங்களை வழங்கியுள்ளது.
கருத்துகள்