இலஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை.
பணியிலிருந்த போது பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய இலஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற பின்னர் வருவாய் ஆய்வாளருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி வட்டம் பூமாலைபுரம் த.முனியசாமியிடம் பட்டாவில் பெயா் மாற்றம் செய்வதற்காக, 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி உதவியாளா் செங்குட்டுவன் மூலமாக ரூபாய். 750 ஐ லஞ்சமாக வாங்கிய அப்போதைய தும்பலம் வருவாய் ஆய்வாளரான புஷ்பவள்ளியை இலஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினா் கைது செய்தனா். இதுபோல தலையாரியான செங்குட்டுவனும் இந்த வழக்கில் கைதானாா்.
இது தொடா்பான வழக்கு திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற புஷ்பவள்ளிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய்.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆா்.காா்த்திகேயன் தீா்ப்பளித்தாா்.
வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்த செங்குட்டுவன் இறந்து விட்டதால், அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.அரசு ஊழியர் தன் கடமையை செய்யவோ, செய்யாமலிருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாக செய்யவோ அல்லது பாதகமாக செய்யவோ சட்டப்படியாக ஊதியமாக அல்லாத பணத்தையோ அல்லது பொருளையோ பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல் ஆகியவை ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 7ன் கீழ் ஊழல் குற்றமாகும்.
ஒரு நபரோ அல்லது பல நபர்களோ, அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையை செய்ய அல்லது செய்யவிடாமல் தடுக்க, அரசு ஊழியர்க்கு கையூட்டு வழங்குவது அல்லது பெறுவது, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 8 மற்றும் 9 ன் கீழ் ஊழலாகும்.
ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக இருக்கும் அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 பிரிவு 10 ன் கீழ் ஊழல் செய்தவராகிறார்.
அரசு ஊழியர் ஒருவர், தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தல் போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச்சட்டம், 1988 பிரிவு 13ன்படி ஊழல் செய்தவராகிறார்.
கருத்துகள்