கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்திய அமைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் உரையாற்றினார்.
இந்திய திரைப்படங்களில் காணப்படும் உள்ளடக்கம் உலக ரசிகர்களின் மனதையும், இதயத்தையும் ஆட்சி செய்கிறது: மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர்
கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்திய அமைப்பில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று உரையாற்றினார். 6000 ஆண்டு பழமை வாய்ந்த கலாச்சாரம் மற்றும் 130 கோடி மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டுள்ள அமைச்சர், இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படத்துறையினர், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையே சிறப்புரை ஆற்றினார்.
திருமிகு வாணி திரிபாதி அமர்வை நெறியாள்கை செய்தார். அந்த அரங்கில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலர் திரு அபூர்வ சந்திரா, எழுத்தாளரும், கவிஞரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவருமான திரு பிரசூன் ஜோஷி, திரைப்பட நடிகர், கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் திரு மாதவன், திரைப்பட நடிகர், மற்றும் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன தலைவர் திரு சேகர் கபூர், திரைப்பட தொகுப்பாளர், ஹாலிவுட் நிருபர் திரு ஸ்காட் ராக்ஸ்பரோ, தயாரிப்பாளர் திரு பிலிப் அவ்ரில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேன்ஸ் படவிழாவின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்ட அமைச்சர், இந்திய – பிரான்ஸ் உறவுகளை வலுப்படுத்துவதில் இதில் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்தார். இந்திய சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சம் பற்றி குறிப்பிட்ட அமைச்சர், இந்திய திரைப்படங்களின் கதை, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட உள்ளடக்கம் உலக ரசிகர்களின் இதயத்தையும், மனதையும் ஆட்சி புரிவதாக தெரிவித்தார். இதற்கான அடிக்கல்லை இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சேத்தன் ஆனந்த் தனது நீச்சா நகர் திரைப்படத்தின் மூலம் 1946-ல் நாட்டினார். 10 ஆண்டுகளுக்கு பின்னர் 1956-ல் சத்யஜித் ரேயின் பதர் பாஞ்சாலி, பால்மே டிவோர் விருதை வென்றது. இன்று இந்திய சினிமா பலமடங்கு உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் திரைப்பட திறமை, தொழில்நுட்ப வலிமை, செழுமையான கலாச்சாரம், கதை சொல்வதில் வண்ணமிகு பாரம்பரியம் ஆகிய கலவையான திரைப்படத்தை உலக ரசிகர்களுக்கு வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். பல்வேறு மொழிகள், பிராந்தியங்களைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்களின் திறமை, இளைஞர்களையும், முதியோர்களையும் பரவசப்படுத்துவதாக அமைந்துள்ளன என்று அவர் கூறினார்.கேன்ஸ் திரைப்பட விழாவில், சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் சந்திக்கிறார்
பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் நாளை மறுநாள் (21.05.2022 அதிகாலை 03.00 மணியளவில்) புதுதில்லியில் இருந்து புறப்படுகிறார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில், 22,23,24 ஆகிய மூன்று நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்த இந்திய அரங்கை, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பார்வையிடுகிறார்.
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் படங்களை கூட்டாக தயாரிப்பதற்கு ரூ. 2 கோடி வரையிலும், வெளிநாட்டுப் படங்களை இந்தியாவில் படம்பிடிக்க ரூ.2.5 கோடி வரையிலும் மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்கிறது. இந்த அரிய வாய்ப்பை சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களை மத்திய இணையமைச்சர் சந்தித்து பேசவுள்ளார். இந்தியாவில் திரைப்படம் தயாரிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருவதை குறிப்பிட்டு, இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வருமாறு அவர்களுக்கு டாக்டர் எல் முருகன் அழைப்பு விடுப்பார்.
கருத்துகள்