இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை சோனியா காந்தி குடும்பம் விட்டுக் கொடுக்க வேண்டுமென்றும்,
சோனியா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரே காங்கிரஸ் தலைவராக வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் கபில் சிபல். ஆனால் இந்தக் கருத்துக்கு அதிருப்தி தலைவர்களே ஆதரவு தெரிவிக்காத நிலையில் தான் இருந்து வந்தது. அதிருப்தி குழுவுக்கு தலைமை தாங்கிய குலாம் நபி ஆசாத் கூட, சோனியா தலைமை தொடருவதில் எந்தச் சிக்கலுமில்லை என்றே கூறிய நிலையில் இன்று உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் சட்டசபை வளாகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார் கபில் சிபல். அவருடன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் உடனிருந்தார்.
இதனால் காங்கிரஸிலிருந்து கபில் சிபல் விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டதாக கூறப்படவே செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், "காங்கிரஸ் கட்சியிலிருந்து மே மாதம் 16 ஆம் தேதியே பதவி விலகிவிட்டேன். தற்போது சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எனக்கு ஆதரவளிக்கும்" என்றார். கபில் சிபலின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே தற்போது பார்க்கப்படும் நிலை.
கருத்துகள்