பிராண்ட் இந்தியாவை உருவாக்குவது குறித்து மூத்த அதிகாரிகளிடையே வட்டமேசை மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்
பிராண்ட் இந்தியாவை உருவாக்குவது குறித்து புதுதில்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற மூத்த அதிகாரிகளிடையே வட்டமேசை மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, நவீன சுகாதார சூழலியல், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் ஆகியவை உலகத்தின் கவனத்தை இந்தியா மீது திருப்பியுள்ளதாக கூறினார். “இன்று பல்வேறு உலக நாடுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு பெருமளவு வந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவ சுற்றுலாவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு, பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியாவில் குணப்படுத்துதல் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இதே போல இந்தியாவால் குணப்படுத்துதல் என்னும் திட்டத்தையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். நமது மருத்துவ பணியாளர்கள் உலகம் முழுவதும் பயணம் செய்யும் வாய்ப்பை இது வழங்கும். மேலும் ஆரோக்கியமான உலக சமுதாயத்திற்கு பங்களிக்கும் என்று அவர் கூறினார்.
மருத்துவ மதிப்புச் சுற்றுலாவை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட டாக்டர் மன்சுக் மாண்டவியா, உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் வசதி மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மருத்துவச் சுற்றுலா, பிராண்ட் இந்தியா ஆகியவற்றை உருவாக்க இது உதவும் என்று அவர் கூறினார்.
மருத்துவச் சுற்றுலா குறித்த கருத்துக்களை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டு இந்தியாவை உலக மருத்துவ மையமாக உருவாக்க உதவ வேண்டும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார். இது மருத்துவ சுற்றுலாவுக்கும், சுகாதாரத்துறைக்கும் மட்டுமல்லாமல் நமது சேவைத் தொழிலுக்கும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள்