உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான 12-வது உச்சிமாநாடு: ஜூன் 12-ஆம் தேதி ஜெனீவாவில் தொடக்கம்
உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான 12-வது உச்சிமாநாடு, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஜூன் 12, 2022 அன்று தொடங்கவுள்ளது.
இந்த ஆண்டு உச்சிமாநாட்டில், பெருந்தொற்றுக்கு உலக வர்த்தக அமைப்பின் பதில், மீன்வள மானியங்கள் குறித்த பேச்சுவார்த்தை, உணவு பாதுகாப்பிற்காக உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் அரசின் கொள்கைகள் உள்ளிட்ட வேளாண்மை பிரச்சினைகள், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தங்கள் மற்றும் மின்னணு பரிமாற்றத்தின் மீதான சுங்க வரிகள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதங்களும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறும்.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் வலுவான இந்திய பிரதிநிதிக் குழு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும். உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு மன்றங்களில், நாட்டிலுள்ள பங்குதாரர்கள் அனைவரின் நலனையும், இந்தியாவின் தலைமையை நோக்கும் வளர்ந்துவரும் மற்றும் ஏழை நாடுகளின் நலனையும் பாதுகாப்பதில் இந்தியாவிற்கு முக்கிய பங்குள்ளது.
வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய பல தரப்பு வர்த்தக அமைப்புமுறையில் இந்தியா நம்பிக்கை கொண்டிருப்பதுடன், உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்துவதற்காக பணியாற்றாவதில் நாம் உறுதிபூண்டுள்ளோம். பாரபட்சமற்ற தன்மை, ஒற்றுமையின் அடிப்படையில் முடிவெடுப்பது மற்றும் வளரும் நாடுகளுக்கு சிறப்பு மற்றும் வேறுபட்ட செய்கைமுறை முதலிய உலக வர்த்தக அமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது.
கருத்துகள்