இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பின் 22-வது மத்திய கால நிர்வாகக் குழு கூட்டத்தில், அமைச்சர் நிதின் கட்கரி உரை
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கட்டமைப்பு மேம்பாட்டில் ‘தரம்’ குறித்து கவனம் செலுத்த, புதிய சிந்தனைகள், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான புதுமை கண்டுபிடிப்பு வங்கி ஒன்றை அமைக்குமாறு திரு.நிதின்கட்கரி யோசனை
கட்டமைப்பு மேம்பாட்டில் ‘தரம்’ குறித்து கவனம் செலுத்த, புதிய சிந்தனைகள், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான புதுமை கண்டுபிடிப்பு வங்கி ஒன்றை அமைக்குமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின்கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.
இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பின் 22-வது மத்திய கால நிர்வாகக் குழு கூட்டத்தில், காணொலி வாயிலாகப் பேசிய அவர், இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பிடமிருந்து புதிய முன்முயற்சிகளை அரசு எதிர்பார்ப்பதாகவும், புதிய கண்டுபிடிப்புகளில் அனைத்து பொறியாளர்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். ஐஐடி-க்கள் மற்றும் உலகிலுள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியுடன், உலகத்தரம் வாய்ந்த, அதிநவீன பரிசோதனைக் கூடம் ஒன்றை இந்திய நெடுஞ்சாலைகள் அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கனவை நனவாக்குவதில், கட்டமைப்பு வளர்ச்சி முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட திரு.கட்கரி, சாலை கட்டமைப்பு என்பது அந்தந்த பகுதியின் முன்னேற்றத்துடன் தொடர்புடையது என்றும் தெரிவித்தார்.
நாட்டில் 2014-ல் 91,000 கி.மீ ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம், கடந்த 8 ஆண்டுகளில் 50%-க்கு மேல் அதிகரித்து, தற்போது 1.47 லட்சம் கி.மீ ஆக உள்ளது என்று கூறிய அமைச்சர், தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த தூரத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கி.மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்த அரசு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் நமது குழுவினர் பல்வேறு உலக சாதனைகளைப் படைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானப் பணிகளில் புதிய மூலப்பொருட்கள் பயன்பாட்டை அங்கீகரிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். சிறந்த தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கட்டுமான செலவை குறைத்தல் ஆகியவையே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் திரு.நிதின் கட்கரி தெரிவித்தார்.
கருத்துகள்