சர்ச்சைக் கருத்தால் 15 வளைகுடா நாடுகள் எதிர்ப்பு எதிரொலி செய்தித் தொடர்பாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு:
பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் உத்தரவு இஸ்லாமிய தூதர் முகமது நபி குறித்த சர்ச்சைக் கருத்தால் வளைகுடா நாடுகளின் கடும் அழுத்தத்தை அரசு சந்தித்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் மத விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறக் கூடாதென திடீர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா, சமீப தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் இஸ்லாமிய தூதர் முகமது நபி குறித்து தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததன் காரணமாக, நுபுர் சர்மாவை இடை நீக்கம் செய்து பாஜக மேலிடம் நடவடிக்கை எடுத்தது.
ஆனாலும், சமூக விரோத நடவடிக்கைக்காக அவரைக் கைது செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருவதற்கிடையே, நுபுர் சர்மா பேச்சு சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக வளைகுடா நாடுகள் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்துள்ளன. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈராக், லிபியா, மலேசியா, பஹ்ரைன் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான்களும் கூட மத விவகாரத்தில் இந்தியாவுக்கு பாடம் நடத்தும் நிலையில். மேலும், வளைகுடா நாடுகளில் இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென்ற பிரசாரங்களும் வலுவடைந்து வருவதுடன் அங்கு ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்சி மேலிடம் திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது இது தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் மட்டுமே தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க வேண்டும்.
தொலைக்காட்சி விவாதங்களில் மத விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக் கூடாது. மத நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் கருத்து கூறக் கூடாது.
ஆவேசமாகவும், வரம்பு மீறியும் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
யாருடைய தூண்டுதலின் பேரிலும் கட்சியின் சித்தாந்தம் மற்றும் கொள்கைகளை மீறக் கூடாது.
நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன், அதற்கான தலைப்பைப் பற்றி பல தகவல்களைத் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும். விவாதத்திற்கு முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும். கட்சிக் கொள்கைகளில் இருந்து விலகக் கூடாது. கவனமாக பேச வேண்டும்.
ஏழைகளின் நலனுக்காக பாஜக அரசு செய்யும் பணிகளை எடுத்துரைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். என விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் நுபுர் சர்மா மீது தானே மாவட்டத்திலுள்ள மும்ப்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நுபுர் சர்மாவுக்கு மும்ப்ரா காவல்துறையின் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், மும்பையிலுள்ள பைடோனி காவல்நிலையத்தில் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று நுபுர் சர்மா அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இஸ்லாமியர்கள் குறிவைக்கப்படுகின்றனர் : பாஜகவுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபை, தாலிபான் அரசு கண்டனமும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற போது, முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதை கண்டித்து கான்பூரில் நடந்த கடையடைப்பின் போது, இரு தரப்பினரிடையே மோதல் வெடித்த நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனம் எழவே அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. அதேபோல், டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜக நீக்கி உள்ளது.
இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. நபிகள் நாயகம் குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு வளைகுடா ஒத்துழைப்பு சபையின் பொது செயலாளர் நயீஃப் பலாஹ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியவர், 'பாஜக செய்தித் தொடர்பாளரின் இந்த கருத்து தவறானது. அதை நிராகரிக்க வேண்டும். நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசியதை கண்டிக்கிறேன். குறிப்பிட்ட மதத்தினரின் தீர்க்கதரிசிகள், மத சின்னங்கள், வழிபாட்டுத் தளங்கள் குறிவைக்கப்படுகின்றன. மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வெறுப்பை தூண்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.' என அவர் வலியுறுத்தி இருக்கிறார். மத உணர்வுகளை புண்படுத்துதல், மத வெறுப்புணர்வை தூண்டும் முயற்சிகளை கண்டிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.
அதேபோல், பாஜக செய்தித் தொடர்பாளருக்கு தாலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாம் மதத்தையும், முஸ்லீம்கள் உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று ஆப்கன் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது. கத்தாரை சேர்ந்த அல் ஜஸ்ஸிரா ஊடகத்தில் வெளியான செய்தியில் , அரபு நாடுகள் இந்த விவகாரம் காரணமாக கோபத்தில் இருப்பதாகவும். இந்திய பொருட்களை உலகம் முழுக்க பல நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் புறக்கணித்து வருவதாகவும். இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு இந்தியா பிரான்ஸ் மற்றும் சீனாவின் பாதையை பின்பற்றி இஸ்லாமியர்களை எதிர்க்கிறது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் வெளியாகும் அரப் நியூஸ் கருத்தில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாக பதிவு செய்துள்ளது. அது தொடர்பாக உலக நாடுகள் தெரிவித்த கருத்துக்களை இந்த ஊடகம் பட்டியலிட்டுள்ளது. துபாயில் வெளியாகும் கல்ப் நியூஸ், நுபுர் சர்மாவிற்கு எதிராக மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதியப்பட்ட எப்ஐஆர்களை பட்டியலிட்டுள்ளது. அதேபோல் கான்பூரில் நுபுர் சர்மா கருத்தால் ஏற்பட்ட கலவரம் குறித்தும் விளக்கமாக பதிவு செய்துள்ளது.அரபு அமீரகத்தில் வெளியிடப்பட்ட கலீஜ் டைம்ஸ் செய்தியில், இந்தியாவில் மைனாரிட்டிகளுக்கு எதிராக அழுத்தமுள்ளது. இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் பல்வேறு நாடுகள் வைக்கப்பட்டு வருகின்றன, என்று விமர்சனம் வைத்துள்ளது. இதில் துருக்கி தான் பழைய விஷயங்களை எல்லாம் கிளறி பதிவு செய்துள்ளது. அதன்படி துருக்கியில் வெளியாகும் TRT World ஊடகத்தில், 2014 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட பல்வேறு இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது.பாஜகவின் மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணியசாமி இதுபற்றிய கருத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அரசை விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி அரசால் அரேபியர்களுக்கு எதிராக நிற்க முடியாது. இந்திய அரசு இஸ்ரேலுக்கு எதிராகவும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நெருக்கடியின்போது தாலிபான்களுடன் சேர்த்து வைக்க கத்தாரிடம் இந்திய அரசு கெஞ்சியது. பணமோசடிக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள துபாய் தான் பிசிசிஐயை கட்டுப்படுத்துகிறது. இன்னும் வேண்டுமா? என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்