மணப்பாறையில் ரூபாய் ஆறாயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம் புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் தனது மனைவி பெயரில் புத்தாநத்தம் ஊராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகளைச் செய்கிற நிலையில் ரூபாய்.நான்கு லட்சம் மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்ட பணிக்கு, அதற்கான தொகையை பெற புத்தாநத்தம் ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனை முகமது இஸ்மாயில் தொடர்பு கொண்ட போது அவர் அந்த தொகையைப் பெற வேண்டுமானால் ரூபாய்.8 ஆயிரம் தனக்கு இலஞ்சமாகத் தரவேண்டும் எனக் கூறியதால், அவர் தன்னிடம் ரூபாய் ஆறாயிரம் தான் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர் அந்தப் பணத்தைக் கொடுக்க விரும்பாமல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் புகார் செய்ததையடுத்து நேற்று மாலை லலஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப்படி முகமது இஸ்மாயில் ஊராட்சிச் செயலாளர் வெங்கட்ராமனை பார்க்க புத்தாநத்தம் ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்றார். ஆனால் அவர் அங்கு இல்லை.
பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருப்பது தெரியவந்த நிலையில் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற முகமது இஸ்மாயில் ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனிடம் பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.6 ஆயிரம் லஞ்சப்பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் கொடுத்த போது, மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்தனர். தொடர்ந்து வெங்கட்ராமன் அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதுடன் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிற நிலையில். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த நிலையில் ஊராட்சி செயலாளரைக் கைது செய்தனர். இந்த சம்பவம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டாரத்தில் பணி செய்யும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்கள் மத்தியில் இது குறித்து பல இடங்களில் பேசப்படுகிறது.
கருத்துகள்