சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் பருவநிலை மற்றும் எரிசக்தி குறித்த பெரிய பொருளாதார நாடுகளின் அமைப்பு கூட்டம்
அமெரிக்க அதிபர் திரு ஜோசப் பைடன் தலைமையில் நடைபெற்ற எரிசக்தி மற்றும் பருவநிலைக்கான முக்கிய பொருளாதார அமைப்பின் மெய்நிகர் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தவும், பருவநிலை நெருக்கடியை சமாளிக்கவும், அதன் மூலம் சிஓபி 27-க்கான உத்வேகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. இந்தக் கூட்டத்தில் உலகெங்கிலும் உள்ள இருபத்தி மூன்று முக்கிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அந்தந்த பருவநிலை மாற்ற உறுதிமொழிகளை செயல்படுத்த தாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய கூட்டு நடவடிக்கைக்கு பங்களிப்பதில் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு பற்றி திரு பூபேந்தர் யாதவ் விளக்கினார். இந்தியாவின் முன்முயற்சிகள் சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி உட்பட அதன் வரம்புக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
இந்தியா ஏற்கனவே 159 ஜிகாவாட் புதைபடிமம் இல்லாத எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தி திறனை நிறுவியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஏழரை ஆண்டுகளில், இந்தியாவின் நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் திறன் 18 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் வருடாந்திர தனிநபர் உமிழ்வுகள் உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்றும் அதன் ஒட்டுமொத்த உமிழ்வுகள் 4 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும் திரு யாதவ் குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவின் பருவநிலை இலக்குகள் லட்சியமானது,உலகளாவிய நன்மைக்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
புவி வெப்பமடைதல் நம்மை எச்சரிக்கும் நிலையில், சர்வதேச ஒத்துழைப்பு, வெற்றிக்கான திறவுகோலை வைத்திருக்கிறது. அதே சமயம், எந்தவொரு நாடும் தனியாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். சரியான புரிதல், சரியான சிந்தனை மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவை அடுத்த அரை நூற்றாண்டுக்கு நமது பாதையை அமைக்க வேண்டும். அனைத்து நாடுகளும் உலகளாவிய கார்பன் பட்ஜெட்டில் நியாயமான பங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் எனஅமைச்சர் வலியுறுத்தினார்.
கிளாஸ்கோ சிஓபி 26 மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்ட சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை குறித்து உலக அளவிலான இயக்கத்தை இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் தொடங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.
கருத்துகள்