சிதம்பரம் நடராஜரெனும் சபாநாயகர் ஆலயத்தில் ஆய்வுக்கு வந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவை தில்லை வாழ் தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கணக்குகளை தர மறுத்த நிலையில் வாக்குவாதம் செய்த பரபரப்பு ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மேற்கண்ட ஆலயத்தில் தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இங்கு கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது குறித்து அரசுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்ய முயன்ற சக தீட்சிதரைத் தாக்கியது, ஆதிதிராவிட வகுப்பு பெண் ஒருவரை சாதியைச் சொல்லி திட்டியது, மற்றும் கணக்கு முறைகேடு என பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இது குறித்து தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
தற்போது ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஒரு குழுவை அமைத்திருந்ததில் வேலூர் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் லெட்சுமணன், பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், இந்து சமய அறநிலையத்துறையின் ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், பெரம்பலூர் மாவட்ட உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டலத் தணிக்கை அலுவலர் இராஜேந்திரன் உள்ளிட்ட ஐவர் நேற்று காலை 9.45 மணிக்கு நடராஜர் எனும் சபாநாயகர் கோவிலுக்கு ஆய்வு செய்ய வந்ததையொட்டி கடலூர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். கோவிலில் ஆய்வுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து கோவிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபமருகில் வந்த அதிகாரிகள் குழுவினர் அங்கு தீவிர ஆலோசனை நடத்தினர். அதனால் கோயிலில் சிறிய பரபரப்பேற்பட்டது. அதிகாரிகள் குழுவினர் மதியம் ஒரு மணி வரை அங்கேயே காத்திருந்தனர். ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே தரையிலமர்ந்த படி அதிகாரிகள் குழுவினர் தாங்கள் கொண்டு வந்த பல்வேறு ஆவணங்களைப் படித்துப் பார்த்தனர். அப்போது கோவில் தீட்சிதர்கள் அதிகாரிகளிடம், கோவில் நடை சாத்தும் நேரமாகி விட்டதெனத் தெரிவித்ததையடுத்து மீண்டும் 4 மணிக்கு கோவிலுக்கு வருவதாகத் தெரிவித்து விட்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.
பிறகு மாலை 5 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு வந்தனர். கோவிலின் செயலர் ஹேமசபேஷ தீட்சிதர் எங்கே? நாங்கள் அவருக்குத்தான் ஆய்வு செய்வது தொடர்பாகக் கடிதம் கொடுத்தோம் என்றனர். அதற்கு அவர் வெளியே சென்று விட்டதாகவும் அவர் வந்தாலும் இதே கருத்தைத் தான் தெரிவிப்பாரென்றும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். ஆய்வு செய்வதைத் தடுக்கக் கூடாதென குழுவினர் எச்சரித்தனர். குழுவினருக்கும், தீட்சிதர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் கோயிலில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர்.
இன்றும் ஆய்வு தொடரும் கோவிலில் ஆய்வுப் பணிக்கு வந்தது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டப்படி கோவில் ஆவணங்களைக் கேட்டும் அவர்கள் காட்டவில்லை. நிர்வாகத்தில் தலையிடக் கூடாதென்று சொல்கிறார்கள். ஆனால் அதற்கான உத்தரவு அவர்களிடமில்லை. பொது மக்கள் வழிபடும் கோவிலில் அரசாங்கம் ஆய்வு செய்வதற்கு இடமுள்ளது. ஆனால் அவர்கள் அனுமதிக்கவில்லை என்றாலும் வெளியே இருக்கும் சொத்துக்கள், கோயிலுக்குச் சொந்தமான கட்டிடிடங்களை ஆய்வு செய்தோம். கோவிலில் எந்தெந்தப் பணிகள் நடைபெற்றுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தோம். கோயில் உள்ளே மட்டும் ஆய்வு செய்யவில்லை. வெளியில் அனைத்தையும் ஆய்வு செய்தோம். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று வருவாய் துறையில் நிலங்கள் குறித்து உள்ள கணக்குகளை ஆய்வு செய்வோம். கணக்கு விவரங்களை மட்டும் ஆய்வு செய்யவில்லை. இந்த ஆய்வு தொடரும். ஆய்வு முடிந்த பிறகு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற புகார்கள் குறித்தும், கோவில், சட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் நேரடி விசாரணை நடத்தி நிர்வாக சீரமைப்பு குறித்து பரிந்துரை வழங்க இந்து சமய அறநிலையத் துறை ஒரு குழுவை அமைத்துள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளராக சி.ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.சி.ஜோதிதீட்சிதர்கள் தனி சமய சீர்மரபினர் என்று உச்சநீதிமன்றத்திவ் தீர்ப்பு முடிவு இறுதியாக்கப்பட்டுள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை சட்டம் பிரிவு 107 ன் கீழ் தீட்சிதர்கள் நிர்வாகம் அறநிலையத் துறையின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டதென்பது உறுதியாகிறது. நடராஜர் எனும் சபாநாயகர் கோவில் நிலங்கள் 1976 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதியிட்ட அரசாணை எண்: 836 ன் படி, தனி வட்டாட்சியர் கோவில் நிலங்கள் கட்டுப்பாட்டிலுள்ளதனால் நடராஜர் கோவில் நிலங்களைப் பற்றி தனி வட்டாட்சியரிடம் தான் கேட்க வேண்டும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பதிவேடுகள் தங்கள் துறை கட்டுப்பாட்டில் 40 ஆண்டுகளாக உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களிலேயே இல்லை. முக்கியக் கோவில்களான பழநி,மதுரை, திருவண்ணாமலை கோவில்களில் பதிவேடுகள் இல்லாமல் உள்ளது. நகைகள் பற்றிய விபரத்திற்கு தாங்கள் 2005 ஆம் ஆண்டில் செய்த தணிக்கை அறிக்கை இதுவரை சிதம்பரம் கோவிலுக்குத் தரப்படவில்லை. கடைசியாக முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கை இல்லாமல் புதிதாக 17 ஆண்டுகளுக்கு பின் துவக்க முடியாது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி துறை தணிக்கை குழுவிற்கான விதிகள் சட்டப்படி செல்லாதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சட்டப்பூர்வமான தணிக்கை மற்றும் ஆய்விற்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம். ஆனால், தங்களது சட்டப்பிரிவு 107 ன் படி நீங்களே ஒப்புக்கொண்ட வகையில் தனி சமய பிரிவினர் நிர்வாகம் செய்யும் கோவில்களில், தன்னிச்சையாக ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் அதிகாரத்திற்கு வெளியில் உங்கள் துறை உள்ளது.அதனால், தங்களது ஆய்வு மற்றும் தணிக்கையை உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டுக், கைவிடுமாறு கோருகிறோம். மேற்கண்ட அம்சங்கள் ஆணையருக்கு விரிவாக தெரிவிக்கப்பட்ட பிறகும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பல கோவில்களில் கால நிர்ணயம் செய்யாமல் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுவது சட்டப்படி செல்லாது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக் கோவில்களில், முறைகேடுகளை சரி செய்யாமல் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் அரசியல் சாசனப்படி பாதுகாக்கப்பட்டு நிர்வாகம் செய்யும் தனி சமய பிரிவினரான தீட்சிதர்களின் நிர்வாகத்தை ஆய்வுகள் இந்து சமய அறநிலையத்துறை செய்ய தார்மீக உரிமையில்லை. என் தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்