தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் பயணம்
மேற்கொள்கிறார். சபர்கந்தாவில் உள்ள சபர் பால்பண்ணையில்
ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகை திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்
இந்தத் திட்டங்கள் இந்தப் பகுதியின் ஊரகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதோடு உள்ளூர் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வருவாயை அதிகரிக்கவும் உதவும்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் தொடங்கிவைக்கிறார்
செஸ் ஒலி்ம்பியாட் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது; இந்தப் போட்டியில் எப்போதும் இல்லாத மிகப்பெரிய அணியை இந்தியா களமிறக்குகிறது
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்
காந்திநகரில் உள்ள கிஃப்ட் நகரில் ஐஎஃப்எஸ்சிஏ தலைமையகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவிருக்கிறார்
கிஃப்ட் நகரில் இந்தியாவின் முதலாவது சர்வதேச தங்கப்பரிமாற்ற சந்தையையும் பிரதமர் தொடங்கிவைப்பார்
2022 ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ஜூலை 28 அன்று நண்பகல் 12 மணியளவில் சபர்கந்தாவின் கதோடா சவுக்கியில் உள்ள சபர் பால்பண்ணையில் பல்வகைத் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இதன் பின் சென்னை செல்லவிருக்கும் பிரதமர், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் பிற்பகல் 6 மணியளவில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைப்பார்.
ஜூலை 29 அன்று காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பார். அதன் பின் குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப (கிஃப்ட்) நகருக்கு பயணம் செய்ய அவர் காந்திநகர் செல்லவிருக்கிறார். அங்கு பிற்பகல் 4 மணியளவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
குஜராத்தில் பிரதமர்
ஊரகப் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவதிலும், விவசாயத்தையும் அது சார்ந்த செயல்பாடுகளையும் அதிக உற்பத்தித்திறன் கொண்டதாக மாற்றுவதிலும் அரசு முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தத் திசையில் மேலும் ஒரு முன்னெடுப்பாக ஜூலை 28 அன்று சபர் பால்பண்ணைக்கு பயணம் செய்து ரூ.1000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வகைத் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் உள்ளார். இந்தத் திட்டங்கள் உள்ளூர் விவசாயிகளையும், பால் உற்பத்தியாளர்களையும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும், அவர்களின் வருவாயை அதிகரிக்கும், மேலும் இந்தப் பகுதியில் ஊரகப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும்.
சபர் பால்பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 120 மில்லியன் டன் உற்பத்தி திறனுடன் பவுடர் தொழிற்சாலையை பிரதமர் தொடங்கிவைப்பார். ஒட்டுமொத்தத் திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.300 கோடிக்கும் அதிகமாகும். இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு உலகளாவிய உணவுப் பாதுகாப்பு நிலைகளை எட்டுவதாக இருக்கும். இது ஏறத்தாழ கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத அதிகபட்ச எரிசக்தி பாதுகாப்புக் கொண்டதாகும். இந்தத் தொழிற்சாலை பெருமளவில் பேக் செய்யும் நவீன, முழுவதும் தானியங்கி முறையை கொண்டிருக்கும்.
சபர் பால்பண்ணையில் நுண்கிருமி நீக்கி, பால் பேக் செய்யும் தொழிற்சாலையையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இது நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் பேக் செய்யும் திறன் கொண்ட நவீன தொழிற்சாலையாகும். இந்தத் திட்டம் ரூ.125 கோடி மொத்த முதலீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தத் தொழிற்சாலை அதிகபட்ச எரிசக்திப் பாதுகாப்புடன் நவீன தானியங்கி முறையைக் கொண்டதாகவும் சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்தைக் கொண்டதாகவும் இருக்கும். பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல வருவாயை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் உதவும்.
சபர் சீஸ் மற்றும் கெட்டி உலர் தயிர் தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு ரூ. 600 கோடியாகும். இந்தத் தொழிற்சாலை செடார் பாலாடைக்கட்டி (நாளொன்றுக்கு 20 மில்லியன் டன்) மொஸரெல்லா பாலாடைக்கட்டி (நாளொன்றுக்கு 10 மில்லியன் டன்) பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி (நாளொன்றுக்கு 16 மில்லியன் டன்) பாலாடைக்கட்டி தயாரிக்கும் போது உருவாகும் மோர் உலர் தொழிற்சாலையின் மூலம் நாளொன்றுக்கு 40 மில்லியன் டன் அளவுக்கு உலர்த்தப்படும்.
சபர் பால்பண்ணை என்பது அமுல் குறியீட்டின் கீழ் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரித்தல், சந்தைப்படுத்துதலுக்கான குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
ஜூலை 29 அன்று காந்திநகரில் உள்ள கிஃப்ட் நகருக்கு பிரதமர் பயணம் செய்வார். கிஃப்ட் நகர் என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்ப சேவைகளின் ஒருங்கிணைந்த மையமாக உள்ளது.
இந்தியாவில் நிதி சார்ந்த உற்பத்தி பொருட்கள், நிதி சார்ந்த சேவைகள், நிதி சார்ந்த நிறுவனங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்குமான ஒருங்கிணைந்த முறைப்படுத்தல் அமைப்பாக விளங்குகின்ற சர்வதேச நிதிச்சேவைகள் மையத்தின் தலைமையகக் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
கிஃப்ட் நகரில் இந்தியாவின் முதலாவது சர்வதேச தங்கப்பரிவர்த்தனை அமைப்பையும் பிரதமர் தொடங்கிவைப்பார். இந்த அமைப்பு இந்தியாவில் தங்கத்தின் நிதிமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு அப்பால், தரம் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்தி சீரான விலைக்கு வழிவகுக்கும். உலகளாவிய தங்கச்சந்தையில் சரியான இடத்தை இந்தியா பெறுவதற்கு இது உதவும். மேலும் நேர்மை மற்றும் தரத்துடன் உலகளாவிய மதிப்பு தொடருக்கும் உதவும்.
தமிழ்நாட்டில் பிரதமர்
ஜூலை 28 அன்று சென்னை ஜவஹர்லால்நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டிகளில் பிரம்மாண்டமான தொடக்கவிழாவை பிரதமர் பிரகடனம் செய்வார்.
2022 ஜூன் 19 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தி தேசிய விளையாட்டரங்கில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைமையகத்தை நோக்கி செல்வதற்கு முன் இந்த ஜோதி இந்தியாவில் 40 நாட்களுக்கும் அதிகமாக சுமார் 20,000 கி.மீ. தூரத்திற்கு 75 முக்கியமான இடங்கள் வழியாகப் பயணம் செய்து மகாபலிபுரத்திற்கு வந்து சேர்கிறது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டு வரும் கௌரவம் மிக்க இந்தப் போட்டி, ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இதில் 187 நாடுகள் பங்கேற்கின்றன. எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையும் விட இது அதிக எண்ணிக்கையைக் கொண்டதாகும். 6 அணிகளில் 30 வீரர்களைக் கொண்டு இந்த போட்டியில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணியை இந்தியா களமிறக்குகிறது.
ஜூலை 29 அன்று சென்னையில் பெருமைமிகு அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்வார். இந்த விழாவில் அவர் 69 பேருக்கு தங்கப்பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்குவார். மேலும் அங்கு திரண்டிருப்போரிடையே பிரதமர் உரையாற்றுவார்.
அண்ணா பல்கலைக்கழகம் 1978 செப்டம்பர் 4 அன்று நிறுவப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி என் அண்ணாதுரையின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் 3 பிராந்திய வளாகங்களையும், தமிழ்நாடு முழுவதும் பரவலாக 13 அமைப்பு கல்லூரிகளையும், 494 இணைப்பு கல்லூரிகளையும் இது பெற்றிருக்கிறது.
கருத்துகள்