தமிழ் நாட்டில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா
தமிழ் நாட்டில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வந்த குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த யஷ்வந்த் சின்காவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலை 5 மணி அளவில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு யஷ்வந்த் சின்கா வந்தார். அங்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு பூங்கொத்துக் கொடுத்து முதல்வர் வரவேற்றார் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக, விசிக, கொமதேக, மமக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளிடம் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார்.
அவருக்கு ஆதரவளிப்பதென அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை வாழ்த்தி தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.
நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது" இந்திய ஜனநாயக அமைப்பின் உயரிய தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த மனிதர் யஷ்வந்த் சின்கா. அவர் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். பின்னர் பேசிய யஷ்வந்த் சின்கா "மாநில ஆளுநர்கள் ஜனாதிபதியின் ஏஜென்டுகளாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தான் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னரின் செயல்பாடுகளைப் பார்க்கிறோம். அவர்கள் சட்டத்தின் ஆட்சி மீது தவறாக நடந்து கொள்ளும் போக்கைத்தான் பல மாநிலங்களில் பார்க்கிறோம். அந்த வகையில் தான் தமிழக ஆளுனரின் செயல்பாடும் துரதிஷ்டவசமாக உள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது. அவ்வாறு உடைப்பவர்கள் வேறு யாரும் அல்ல. அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் பதவியேற்றவர்கள் தான். மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பேச்சை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர்கள் தொடர்ந்து இந்துத்துவா பற்றியே பேசி வருகிறார்கள். இந்துத்துவா மீது நம்பிக்கையில்லை என்றால் மாநில அரசை கலைத்து விடுவோம் என்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம். எந்த அரசாக இருந்தாலும் சரி, அது அரசியல் அமைப்புச் சட்டத்தை நம்பி இருந்தாலும் இந்துத்துவா மீது நம்பிக்கை இல்லாத பட்சத்தில் கவிழ்க்கப்படுமென்று தான் அர்த்தம். மதசார்பின்மை மீது நம்பிக்கை இருந்தால் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கெதிராக பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது. மாநில நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். எதிர்காலத்திலும் போராடுவேன்.
இது எனக்கு வழங்கப்பட்ட முதல் வாய்ப்பல்ல. நான்காவது வாய்ப்பு. ஒருவேளை பத்தாவது வாய்ப்பாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் என்னை பொறுத்த வரை இது ஒரு போராட்டம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், அதன் மதிப்பை வலுப்படுத்தவும் இந்தத் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளேன். பொதுமக்கள், கடவுளின் ஆசியோடு ஜனாதிபதி பதவியை அலங்கரிக்கும் பட்சத்தில் அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களைச் செயல்படுத்தவும், பாதுகாக்கவும் என்றும் உறுதுணையாக இருப்பேன் என உறுதி அளிக்கிறேன். மாநில ஆளுநர்கள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் ஆளுநர்களின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர் நாடாளுமன்றம் தனது தனித்துவத்தை இழந்து வருகிறது. எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்