வங்கிச் சேவைகளை கிராம மகளிர் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் வேண்டுகோள்
இன்று இந்திய குடிமக்கள் பெரும்பான்யோருக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது. ஆனால் கிராமப்புற பெண்கள் வங்கிகள் வழங்கும் சேவைகள் பலவற்றை பயன்படுத்தி கொள்வதில்லை. குறைந்த பிரீமியத்தில் காப்பீட்டுத் திட்டங்களும் ஓய்வூதிய திட்டமும் ஏழைகளுக்காகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 20 ரூபாய் பிரீமியத்தில் விபத்துக் காப்பீடு திட்டம் உள்ளது. விபத்தில் இறந்தால் குடும்பத்துக்கு 2 லட்சம் இழப்பீடு கிடைக்கும். அதேபோல் ஆண்டுக்கு
436 ரூபாய் பிரீமியத்தில் ஆயுள் காப்பீடு உள்ளது. எந்த வகையிலாவது இறப்பு நேர்ந்தால் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். அரசு வேலையில் இல்லாதவர்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம்.
கிராமப் பெண்கள் வங்கிச் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று கடலூர் இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் திரு. அசோக் ராஜா கேட்டுக் கொண்டார்.
இந்திய அரசின் மத்திய தகவல் தொடர்பு துறையின் புதுச்சேரி கள அலுவலகம் கடலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இன்று (26.7.2022) மேல் புவனகிரி ஒன்றியம் லால்புரம் கிராமத்தில் நடத்திய சிறப்பு விழிப்புணர்வு முகாமில் தலைமையுரை ஆற்றிய போது அசோக் ராஜா இவ்வாறு தெரிவித்தார்.
கடலூர் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு ஏ.அப்துல் லத்தீப் துவக்க உரையாற்றினார். எந்த ஒரு சேமிப்பு திட்டத்தைவிடவும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் தான் அதிக வட்டி தரப்படுகிறது.
ஆகவே பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.சிவகுமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமிகு ஜா.ஜெனிட்டா லூசியாமேரி, கடலூரில் உள்ள பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர் திருமிகு சுகன்யா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
லால்புரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமிகு கோமதி சேகர், ஒன்றியக் குழு உறுப்பினர் திருமிகு லதா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வரவேற்புரை ஆற்றிய மத்திய மக்கள் தொடர்புத் துறை புதுச்சேரி கள அலுவலக துணை இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு -5 இன்படி கடலூர் மாவட்டத்தில் பிறப்பு நிலையில் குழந்தைகளின் பாலியல் விகிதம் 819 ஆக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
அதாவது 1000 ஆண் குழந்தை பிறந்தால் 819 பெண் குழந்தைகளே பிறக்கின்றன. இந்த நிலை மாறவேண்டும். பெண் குழந்தைக பிறப்பை ஊரே ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிறைவில் கள விளம்பர உதவியாளர் எஸ். வீரமணி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கும் இரண்டு பெண் குழந்தைகளோடு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி மையம் சார்பில் ஊட்டச்சத்து கண்காட்சி, சுகாதாரத் துறை சார்பில் கொசுக்களால் பரவும் நோய்கள் தொடர்பான கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தன. கோவிட் தடுப்பூசி பூத் ஒன்றும்
அமைக்கப்பட்டு இருந்தது.
ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக்கு பரிசு வழங்கப்படுகிறது.
கருத்துகள்