தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேச்சு
தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் தகவல் ஜூலை 13, 2022 ல் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக 54-வது பட்டமளிப்பு விழாவில், சிறப்புரையாற்றியவர், ஐநா சபையில் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற தமிழ் இலக்கிய மேற்கோளுடன் பிரதமர் தமது உரையை தொடங்கியதை நினைவுகூர்ந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் இருக்கை தொடங்கப்படும் என பிரதமர் அறிவித்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். உலகம் முழுவதும் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள் என்றும் இதற்கு சிறந்த உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கிறார் என்றும் டாக்டர் எல் முருகன் கூறினார்.
அனைவரும் தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், புதிய கல்விக் கொள்கையில் தமிழ் போன்ற மாநில மொழிகள் உட்பட தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்றும், அவர்கள் இந்தியாவை உலக அளவில் முன்னேற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார். ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரகாசிக்கின்ற இளம் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்
இந்தியாவில் தோன்றிய யோகா பிரதமர் எடுத்த முயற்சியின் காரணமாக உலகம் முழுவதும் பரவி உள்ளது என்று குறிப்பிட்ட அவர், 2015-ஆம் ஆண்டு ஜூன் 21-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவும் பிரதமர் காரணமாக இருந்தார் என்றார். கேலோ இந்தியா திட்டம் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவி செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கொவிட் நெருக்கடியிலிருந்து பல நாடுகள் மீளமுடியாத நிலையில், இந்தியா இதிலிருந்து மீண்டு வந்திருப்பதோடு இதுவரை நாட்டில் கட்டணமில்லாமல் 200 கோடி கொவிட் தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட போது ஆபரேஷன் கங்கா மூலம் 23,000 மருத்துவ மாணவர்களை இந்தியா பத்திரமாக மீட்டு வந்ததை டாக்டர் முருகன் சுட்டிக்காட்டினார்.
பட்டமளிப்பு விழா உரையாற்றிய தமிழக ஆளுநர் திரு ஆர் என் ரவி, தங்களின் சொந்த கிராமங்களின் அல்லது பகுதியின் அடையாளமாக விளங்குகின்ற இளைஞர்களை பாராட்டினார். மாணவர்களை சுற்றியுள்ள மக்கள் அவர்களிடமிருந்து சாதனைகளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். எளிய பின்னணியிலிருந்து வந்த காமராஜர், அனைவருக்கும் உந்துசக்தியாக உயர்ந்ததையும் அவர் எடுத்துரைத்தார்.
சுகாதாரக்கல்வி மற்றும் மின்சாரத்துறையில் நாடு முன்னேற்றம் அடைந்திருப்பதாக தெரிவித்த ஆளுநர், கடந்த 8 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது என்றார். குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ செலவை உறுதி செய்யும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ திட்டம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
பெங்களூருவில் உள்ள தேசிய உயிரியல் விஞ்ஞான மையத்தின் பேராசிரியர் திரு பி பலராம் தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரையாற்றினார். இந்த பட்டமளிப்பு விழாவில் 1,33,091 பேர் பட்டங்களை பெற்றிருப்பதாகவும், 136 மாணவர்களுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜெ குமார் தெரிவித்தார்.
கருத்துகள்