குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கை வெளியீடு
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்கள் சட்டம் 1952, பிரிவு 4-ன் துணைப்பிரிவு 1-ன் கீழ் குடியரசு துணைத்தலைவர் பதவியிடத்தை நிரப்புவதற்காக, தேர்தல் அறிவிக்கையை, தேர்தல் நடத்தும் அதிகாரி திரு உத்பால் குமார் சிங் வெளியிட்டுள்ளார்.
வேட்புமனுவை, வேட்பாளர் அல்லது அவரை முன்மொழியும் நபர்களில் யாரேனும் ஒருவர் அல்லது வழிமொழிபவர்களில் ஒருவர், புதுதில்லியிலுள்ள நாடாளுமன்ற அலுவலகத்தின் தரைத்தளம் அறை எண் 18-ல் உள்ள தேர்தல் அலுவலர் அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இல்லாமல் போனால், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வழங்கலாம். 19 ஜூலை 2022 வரை அனைத்து நாட்களிலும் (விடுமுறை நாள் தவிர) காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை தாக்கல் செய்யலாம்.
வேட்பு மனுவுடன், வேட்பாளர் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதற்கான சான்றளிக்கப்பட்ட நகலை இணைக்க வேண்டும்.
ஒவ்வொரு வேட்பாளரும், காப்புத் தொகையாக பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகை வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது, தேர்தல் அலுவலரிடம் நேரிடையாக செலுத்தலாம் அல்லது முன்னதாக இந்திய ரிசர்வ் வங்கி அல்லது அரசு கருவூலத்தில் செலுத்தி, அதற்கான ரசீதை வேட்பு மனுவுடன் இணைக்க வேண்டும்.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 20ம் தேதி காலை 11 மணிக்கு மேற்கொள்ளப்படும். வேட்புமனுவை விலக்கிக்கொள்ள விரும்பும் வேட்பாளர்கள், நேரிலோ அல்லது தமது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவோ எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து ஜூலை 22 ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் திரும்ப பெறலாம். போட்டியிருப்பின், ஆகஸ்ட் 6ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும்.
கருத்துகள்