வீட்டு வளர்ப்பு நாயைக் குளிப்பாட்ட மறுத்த அரசு காவலரை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்த சர்ச்சை முதல்வர் தலையீடு காரணமாக இரத்து
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வீட்டு வளர்ப்பு நாயைக் குளிப்பாட்ட மறுத்த அரசு காவலரை கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்தது சர்ச்சையானது.
மாநில முதலமைச்சர் அலுவலகம் தலையிட்டதால் அவரது பணியிடை நீக்க உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் காவல்துறை தொலை தொடர்பு கண்காணிப்பாளராக பணிபுரிபவர் நவநீத் சர்மா. இவரது மனைவி இரயில்வேயில் உயரதிகாரியாக இருக்கும் நிலையில் இரயில்வே குடியிருப்பில் தான் நவநீத் சர்மா மனைவியுடன் தங்கியுள்ளார். நவநீத் சர்மாவுக்கு அரசு சார்பில் இரண்டு பாதுகாவலர்கள் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது பாதுகாவலரான ஆகாஷ் என்பவரை அவரது வீட்டு வேலைக்காரர் அழைத்து வளர்ப்பு நாயைக் குளிப்பாட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய வேலை அதுவல்ல என்று கூறி ஆகாஷ் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று தொலைக்காட்சி பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வீட்டு வேலைக்காரர், நவநீத் சர்மாவுக்கு போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். இதில் கோபமடைந்த நேர்மை இல்லாத நவநீத் சர்மா, தொலைத்தொடர்பு சார்பு ஆய்வாளரை அழைத்து, ஆகாஷ் தன்னுடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கூறியுள்ளார்.
வேறு வழியின்றி கண்காணிப்பாளர் கூறியபடி ஆகாஷ் மீது சார்பு ஆய்வாளர் எப்ஐஆர் பதிவு செய்த பின் ஆகாஷை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து நவநீத் சர்மா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து காவலர் ஆகாஷ் முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதையடுத்து பணியிடை நீக்கம் செய்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய காவல்துறை தலைமை அலுவலகத்தில் உதவி ஐஜிக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவலர் ஆகாஷின் பணியிடை நீக்கம் செய்த உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் கண்காணிப்பாளர் நவநீத் சர்மாவின் பாதுகாவலர் பணியிலிருந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் கேரளாவில் உள்ள காவல்துறையினர் மத்தியில் பேச்சாக உள்ளது.
கருத்துகள்