நவீன இந்தியாவின் சிற்பி லோகமான்ய பாலகங்காதர திலகர்
சுதந்திரத்தின் 75-வது ஆண்டு பெருவிழாவையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் ஜூலை 25 அன்று இணையவழி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில் லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவர் பேராசிரியர் அனுராதா சிறப்புரையாற்றினார்.40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்ட பாலகங்காதர திலகர், பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து நாட்டை விடுவிக்க கல்வி, பத்திரிகை, தேசிய இயக்கம் ஆகிய மூன்று அம்சங்கள் தேவை என்பதை உறுதிபட எடுத்துரைத்தார். இரண்டு பட்டங்கள் பெற்றிருந்த போதும், ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் அரசுப் பதவி எதையும் வகிப்பதில்லை என்பதில் அவர் உறுதி கொண்டிருந்தார். தேசபக்த உணர்வும், சிறந்த கல்வியும் இல்லாமல் சிறந்த நாட்டை உருவாக்க முடியாது என்ற தெளிந்த சிந்தனையோடு ஏழைகளுக்கு கல்வியறிவை விரிவுபடுத்தும் பணியில் அவர் ஈடுபட்டார். இதற்காக பள்ளிகளை நிறுவியதோடு, பத்திரிகைகளையும் தொடங்கினார்.
சிங்கம் என பொருள்படும் கேசரி என்ற பத்திரிகையை மராத்தியிலும், மராத்தா என்ற ஆங்கில செய்தித்தாளையும் திலகர் வெளியிட்டார். ஆங்கிலேயர் ஆட்சிக்கு மனு அளிக்கும் அமைப்பாக இருந்த காங்கிரஸை புரட்சிகர அமைப்பாக மாற்றுவதற்கு 1889 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அவர் வித்திட்டார். இதனுடைய பரிணாம வளர்ச்சியாக 1904 ஆம் ஆண்டு பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் போது, அந்தக் கட்சியில் மிதவாதத் தலைவர்கள், தீவிரவாதத் தலைவர்கள் என்ற இரு நிலைகள் உருவாயின. பாலகங்காதர திலகர், அரவிந்த் கோஷ், லாலா லஜபதி ராய், பிபின் சந்திர பால் உள்ளிட்டோர் தீவிரவாத சிந்தனை கொண்டவர்களாக விளங்கினர்.
1916 ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதேசி, அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயராஜ்ஜியம் என்ற கோட்பாடுகளை முன்வைத்து அதன் வழியில் சுதந்திரப் போராட்டத்தை நடத்த மக்களுக்கு உத்வேகமூட்டினார்.
சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் என்ற திலகரின் ஆவேச முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்தது. இது விடுதலைப் போராட்டத்தை வேகப்படுத்தியது. திலகரின் தீரமும், தேசத்தின் மீதான பற்றும் நாட்டுக்கு விடுதலை கிடைப்பதில் பெரும் பங்கு வகித்தன. நவீன இந்தியாவின் சிற்பி பாலகங்காதர திலகர் என அவரது மறைவின்போது மகாத்மா காந்தி யங் இந்தியா இதழில் எழுதிய அஞ்சலி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திலகர் பிறப்பிலேயே ஓர் ஜனநாயகவாதி என்றும் கூறியுள்ளார். பால கங்காதர திலகர் என்ற மாமனிதருக்கு நினைவாக சென்னையில் திலகர் திடல் அமைக்கப்பட்டது. அவரது 150-வது பிறந்தநாளின் போது மத்திய அரசு 100 ரூபாய் நாணயம் வெளியிட்டு கௌரவித்தது என்பது போன்ற பல்வேறு வரலாற்றுத் தகவல்களை பேராசிரியர் அனுராதா இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.
இந்த இணையவழி கருத்தரங்கில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலக துணை தலைமை இயக்குனர் திரு எம் அண்ணாதுரை அறிமுக உரை நிகழ்த்தினார்.
கருத்துகள்