தேசிய கைத்தறி தினத்தை ஆகஸ்ட் 7 அன்று தேசம் கொண்டாடுகிறது
கைத்தறித் துறை என்பது நமது நாட்டின் வளமான பலவகை கலாச்சார பாரம்பரியங்களின் அடையாளமாகத் திகழ்கிறது.
நமது நாட்டின் ஊரகப்பகுதிகளிலும், சிறு நகரங்களிலும் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக கைத்தறி உள்ளது. நெசவாளர்கள் மற்றும் நெசவு சார்ந்த தொழிலாளர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக இருப்பதால், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தத் துறை நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது.
இயற்கையை மையமாகக்கொண்ட இந்தத் துறை, உற்பத்தி நடைமுறையில் சூழலுக்கு உகந்தது; குறைந்தபட்ச மூலதனமும் மின்சாரமும் தேவைப்படுவது; ஆடை அலங்கார போக்குகளில் மாற்றங்களை எதிர்கொள்வதில் புதிய கண்டுபிடிப்புக்கு நெகிழ்ச்சித் தன்மையை கொண்டிருப்பது; விரைந்து மாற்றம் விரும்பும் வாடிக்கையாளர்களால் தெரிவு செய்யப்படுவது.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தியது.
இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடுவது என 2015-ல் மத்திய அரசு முடிவு செய்தது. முதலாவது தேசிய கைத்தறி தினம் பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆகஸ்ட் 7 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்நாளில் நாம் கைத்தறி நெசவு செய்யும் சமூகத்தை கௌரவப்படுத்துகிறோம். மேலும், நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தத் துறையின் பங்களிப்பை பறைசாற்றுகிறோம். நமது கைத்தறி பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகளுடன் அதிகாரம் அளிக்க நாம் மீண்டும் உறுதியேற்கிறோம்.
நமது கைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதன் மூலம் கைத்தறியின் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யவும் அவர்களின் நேர்த்தியான கைத்திற பெருமையை நிலைநிறுத்தவும் அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
கருத்துகள்