பிள்ளைச்சாவடி ஆனந்த ரங்கம் பிள்ளை அரசு சிறப்பு பள்ளியில் நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமிர்தப் பெருவிழா
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாற இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்: துணைவேந்தர் டாக்டர் எஸ்.மோஹன்
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இந்தியா பல துறைகளில் முன்னேறி வருகிறது. நாம் வளரும் நாடுகள் பிரிவில் தான் இருக்கிறோம். இந்தியா தனது 100 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது வளர்ந்த நாடாக மாறி இருக்கும். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று மாணவர்களும் இளைஞர்களும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். உணவு, உடை, இருப்பிடம், தொழில், வேலை, வருமானம் ஆகியவற்றில் நம் நாடு தன்னிறைவு பெற்ற நாடாக மாற வேண்டும். சுதந்திரத்திற்காக இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பது நாட்டு முன்னேற்றத்தில் நாம் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது தான் என்று புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.மோஹன் கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய மக்கள் தொடர்புத் துறை கள அலுவலகம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்படும் மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து இன்று (10.8.2022) பிள்ளைச்சாவடி ஆனந்த ரங்கம் பிள்ளை அரசு சிறப்பு பள்ளியில் நடத்திய இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமிர்தப் பெருவிழா மற்றும் வீடுதோறும் மூவர்ணக்கொடி வழங்குதல் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போது துணைவேந்தர் இவ்வாறு தெரிவித்தார்.
சுதந்திரம் என்பது நமக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் உரிமை
ஆகும். நமது உரிமை அடுத்தவர் உரிமையை மீறாமல் இருக்க வேண்டும். சித்த மருத்துவம் நமது பாரம்பரிய மருத்துவ முறையாகும். புதுச்சேரியிலேயே 28 சித்தர்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. சித்த மருத்துவத்தில் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று துணை வேந்தர் மோஹன் மேலும் கேட்டுக் கொண்டார்.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய தலைமை அலுவலர் டாக்டர் ஆ.ராஜேந்திர குமார் நோக்கவுரை ஆற்றினார். மத்திய மக்கள் தொடர்புத் துறை துணை இயக்குநர் முனைவர் தி.சிவக்குமார் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத் துறை துணை இயக்குநர் திரு.பி.கனகராஜ், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் எஸ்.ராஜேந்திரன், முனைவர் ஜே.குமரன், அரசு சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர் திருமிகு.எஸ்.சாம்பவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய விடுதலைப் போராட்டம் குறித்து நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை துணை வேந்தர் மோஹன் வழங்கினார்.
தத்தம் வீடுகளில் ஏற்றி வைப்பதற்கு மூவர்ணக் கொடிகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அமுக்கரா சூரண மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஆனந்த ரங்கப்பிள்ளை அரசு சிறப்பு பள்ளிக்கு மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் பக்கெட், குவளை உட்பட பாத்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. டாக்டர் எஸ்.சண்முகராம் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
முன்னதாக மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய டாக்டர்
இர.ரத்தினமாலா வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவியாளர் திரு.எஸ்.வீரமணி நன்றி கூறினார். நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் சிறப்பு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தனர்.
கருத்துகள்