நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரை ஆஜர்படுத்த வேண்டுமென மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் பொன்ராசு (எ) ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மனுவில், எங்கள் ஊரிலுள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியும், கடைகளை உருவாக்கியும் பலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனால், எங்கள் கிராம மக்களால் சாலையை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை. அது குறித்து 2008-ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்ததை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று 2010-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், பல முறை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், நெடுஞ்சாலைத்துறையின் மண்டலப் பொறியாளருக்கும் நினைவூட்டல் கடிதம் கொடுத்த பின்னரும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தற்போது அங்கு வீடுகள், கடைகள் என்று பல கட்டிடங்களைக் கட்டி ஆக்கிரமிப்பாளர்கள் வாடகைக்கும் விட்டுள்ளனர். அந்த இடத்துக்கு வருவாய் துறையில் பட்டா கேட்டும் விண்ணப்பித்துள்ளனர். அதையடுத்து 2021 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், நெடுஞ்சாலை துறையின் மண்டலப் பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டுமெனக் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அமர்வு விசாரித்த போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.உமாபதி, இந்த நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அலட்சியமாக உள்ளனர். அதுமட்டுமல்ல இந்த வழக்கு விசாரணைக்கு நேரிலும் ஆஜராகவில்லை என்று வாதிட்டதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு ஜூலை 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று உயர்நீதிமன்றம் 2010-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை 3 வாரங்களில் அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் மாவட்ட ஆட்சித்தலைவரும், மண்டலப் பொறியாளரும் நேரில் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்ட படி தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு அதிகாரிகள் இருவரும் ஆஜராக வில்லை. ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வில்லை. எனவே, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், மண்டலப் பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரக்கூடிய பிடிவாரண்ட்டைப் பிறப்பிக்கிறோம். இந்த பிடிவாரண்ட்டை நாமக்கல் மாவட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்படுத்த வேண்டும். இரு அதிகாரிகளையும் பிடித்து, அவர்களை அடுத்த விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங்கும், சந்திரசேகரனும், ரூ.50 ஆயிரத்துக்கான உத்தரவாதப் பத்திரத்தை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்