தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பாளையங்கோட்டையில் இந்தியவிடுதலைப் போராட்டம் தொடர்பான அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியையும்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அறியப்படாத வீரர்கள் குறித்து தூர்தர்ஷன் பொதிகையில் ஸ்வராஜ் எனும் தொடரையும் மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கிவைக்கிறார்
சென்னையில் உள்ள இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மண்டலத்தின் மண்டல அலுவலகமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு அமிர்தப் பெருவிழாவை பலவிதங்களில் கொண்டாடி வருகின்றது. இளம் தலைமுறையினருக்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு, அதில் ஈடுபட்ட தலைவர்கள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சிகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் பெரும்பான்மை மாவட்டங்களிலும் அந்தமானிலும் இந்த அரிய புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.
இப்போது 10 நாட்களுக்குப் பெரும் திருவிழாவாக இந்த நிகழ்ச்சி நாளை (20.08.2022 முதல் 29.08.2022) வரை பாளையங்கோட்டை நகராட்சி திருமண மண்டபத்தில் (அருண்ஸ் மஹால்) நடக்க இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை இந்திய அரசின் தகவல் & ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் அமைச்சகங்களின் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் 20.08.2022 காலை 9.45 மணிக்கு தொடங்கிவைக்கிறார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அறியப்படாத வீரர்கள் குறித்து தூர்தர்ஷன் பொதிகையில் ஸ்வராஜ் எனும் தொடரையும் அமைச்சர் தொடங்கிவைப்பார். இந்தத் தொடர் ஆகஸ்ட் 20 முதல் 75 வாரங்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும். எச்டி தொழில்நுட்பத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகும். திங்கட்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கும், புதன்கிழமைகளில் பிற்பகல் 4 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் காலை 9 மணிக்கும் இந்தத் தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்படும். நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த அறியப்படாத 75 விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறும், தியாகங்களும் இந்தத் தொடரில் இடம்பெறும். தமிழ்நாட்டின் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார் போன்ற தீரமிக்க போராளிகளும், இந்தத் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடக்க நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.மு.அப்துல் வஹாப், திரு.நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி மேயர் திரு.பி.எம்.சரவணன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் திரு.வி.விஷ்ணு, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்கின்றனர்.
தகவல் & ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குனர் திரு.எஸ்.வெங்கடேஷ்வர், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் ஆகியவற்றின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு.எம்.அண்ணாதுரை, சென்னை மத்திய மக்கள் தொடர்பாக மண்டல இயக்குனர் திரு.ஜெ.காமராஜ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
கண்காட்சியை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். தினந்தோறும் முற்பகலிலும், மாலை நேரத்திலும் இந்திய அரசில் பதிவு பெற்ற பிரபலமான கலைக்குழுக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொள்ளும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியருக்கு வினாடி – வினா போட்டி தினந்தோறும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு பள்ளிகளுக்கு இடையிலான பேச்சு போட்டி நடக்கவுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000, ஆறுதல் பரிசு இரண்டு தலா ரூ.500 ழங்கப்படும்.
இந்த 10 நாள் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக கள அலுவலகத்தின் துணை இயக்குனர் திரு.தி.சிவக்குமார் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.
கருத்துகள்