சமூகத்தில் விவாதம் மற்றும் உரையாடலுக்கான இடத்தை வலுப்படுத்துமாறு குடியரசு துணைத்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்
சமூகத்தில் விவாதம் மற்றும் உரையாடலுக்கான இடத்தை வலுப்படுத்துமாறு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அழைப்பு விடுத்துள்ளார். மற்றவர்களின் கருத்தினை சகித்து கொள்ளாதது, சுதந்திரமான சிந்தனை பரிமாற்றத்திற்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
குவஹாத்தியில் இன்று பிரஜ்னா பிராவா ஏற்பாடு செய்திருந்த லோக்மான்தன் எனும் தேசிய உரையாடலின் மூன்றாவது பகுதியை இன்று தொடங்கிவைத்து பேசிய அவர், வாதம், விவாதம், அறிவுப்பகிர்தல் என்ற மகத்தான பாரம்பரியத்தை இந்தியா கொண்டிருந்ததை நினைவுகூர்ந்தார்.
வடகிழக்கு இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியங்களை எடுத்துரைப்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டிய திரு தன்கர், இவற்றின் பன்முகத்தன்மை பற்றி குறிப்பிட்டார். அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் எனும் மிகச்சிறந்த இந்திய மாண்புகளை இந்தப்பகுதியின் கலாச்சார நடைமுறைகள் எதிரொலிக்கின்றன என்று அவர் கூறினார்.
இந்திய சமூகத்தின் அறிஞர்களின் பங்களிப்பை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், கொள்கை விஷயங்களில் மன்னர்களுக்கு முனிவர்கள் அறிவுரை கூறி சமூகத்தில் நல்லிணக்கத்தையும், நிலைத்தன்மையையும் உறுதிசெய்த வரலாற்று தகவலை எடுத்துரைத்தார். தற்போதுள்ள பிரச்சனைகள் பற்றி பேசுமாறு அறிஞர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், தற்காலத்தில் அறிஞர்கள் மௌனமாக இருப்பதென முடிவு செய்தால் சமூகத்தின் மிகமுக்கியமான இந்த பிரிவினர் பிறகு எப்போதுமே மௌனமாக இருக்க நேரிடும் என்றார். சுதந்திரமான உரையாடலை இவர்கள் நடத்தும் போதுதான் சமூகத்தின் நேர்மையும், உரிமையும் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.
அரசின் மூன்று பிரிவுகளான சட்டம் இயற்றும் அமைப்பு, நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றின் இணக்கமான, சீரான தன்மையை உறுதிசெய்ய அறிஞர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் குடியரசு துணைத்தலைவர் கூறினார். கருத்து வெளியிடும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அமிர்தம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் அசாம் ஆளுநர் பேராசிரியர் ஜகதீஷ் முக்கி, முதலமைச்சர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா, பிரஜ்னா பிராவாவின் தேசிய அமைப்பாளர் திரு ஜெ.நந்தகுமார், லோக்மான்தன், செயல் தலைவர் டாக்டர் கார்கி சைக்யா மகந்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்த குடியரசு துணைத்தலைவர் இம்மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் குவஹாத்தியில் உள்ள புகழ்மிக்க காமாக்யா ஆலயத்திற்கு தமது மனைவி டாக்டர் சுதேஷ் தன்கருடன் சென்றிருந்த அவர், அங்கு வழிபாடு செய்தார்.
கருத்துகள்