டாஸ்மாக் மது விற்பனை நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குடிப்பகப்பார்கள் நடத்த எந்தவிதமான சட்டமும் அனுமதிக்கவில்லை என உயர்நீதிமன்றம் சாடல் ஒரு நீள் பார்வை
அரசு மதுபானக் கடைகளில் குடிப்பகம் தொடர்பான ஏலம் வழங்கக்கூடாதென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் நிர்வாக அரசு மதுபான விற்பனைக் கடைகளினருகில் குடிப்பவர்களுக்கான தின்பண்டங்கள் விற்பனை செய்வது, காலி மதுபானப் போத்தல்களைச் சேகரிப்பது தொடர்பான மதுபானக் குடிப்பகக்கடை உரிமங்களுக்கு ஏல டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாக அறிவிப்பானை வெளியிட்டதில்,
தற்போது பார்கள் என்ற பெயரில் நடக்கும் குடிப்பகக்கடை நடத்தி வரும் இடத்தை புதிதாக ஏல டெண்டர் எடுத்தவருக்கு வழங்க வேண்டுமென டாஸ்மாக் நிர்வாகம் அவர்களை நிர்பந்தித்து வருவதாகவும், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள தங்களை அவ்வாறு மூன்றாவது நபர்களுக்கு அந்த இடத்தைத் தர சட்டப் படி எந்தவொரு உத்தரவையும் டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பிக்க முடியாதெனவும் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டாஸ்மாக் குடிப்பகக்கடைகளெனும் பார்களுக்கான ஏல டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என்றும், ஆனால் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை ஏல டெண்டர்களை இறுதி செய்து வழங்கக்கூடாதென உத்தரவிட்டு விசாரணையை அப்போது ஆகஸ்ட் மாதம்.30-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்ததையடுத்து சமீபத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் குடிப்பக பார் டெண்டர்களில் முறைகேடு நடந்திருப்பதாக டாஸ்மாக் குடிப்பக பார் உரிமையாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.
இது தொடர்பாகப் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கான அமைச்சர் செந்தில் பாலாஜி, `டாஸ்மாக் குடிப்பக பார்களுக்கான ஏல டெண்டர்கள் அனைத்துமே வெளிப்படைத் தன்மையோடு தான் நடைபெற்றது’ என விளக்கம் அளித்திருந்த போதிலும்,
பார் உரிமையாளர்கள் சார்பில் ஏல டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவே .இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.சரவணன், பார் உரிமையாளர்கள் தொடர்ந்திருந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார். மேலும், அந்தத் தீர்ப்பில், ``டாஸ்மாக் நிர்வாகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குடிப்பகப்பார்கள் நடத்த எந்தவிதமான சட்டமும் அனுமதிக்கவில்லை. டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளை ஒட்டி அமைக்கப்படும் குடிப்பகப் பார்களில் மது அருந்தத் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதியளிக்காது. பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை சார்ந்த ஆணையருக்கு மட்டுமே உள்ளது.
மதுவிலக்கு சட்டம் மற்றும் விதிகளின் படி, தனிப்பட்ட இடத்தில், குடிகாரர்கள் யாரும் அவர்களது வீட்டில் மது குடித்துக் கொள்ளலாம். பார்கள் எனும் குடிப்பகத்தில் மது குடிப்பதை டாஸ்மாக் நிறுவனம் ஊக்குவிக்க விரும்பினால், மதுவிலக்கு சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.மேலும், ``டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தைக் குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகிலுள்ள இடத்தை பாராக மேம்படுத்தி நடத்துவதை அனுமதிக்க முடியாது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்க மட்டுமே அனுமதி உள்ளது. குடிப்பகப் பார்களை இணைத்து நடத்தச் சட்டத்தில் இடமில்லை.
டாஸ்மாக் மதுபானக் கடைவாசலில் நின்ற ஒரு நபர் கட்சியின் பெண் நிர்வாகி ஒருவரிடம் ஆபாசமாகச் சைகை காட்டிய நிலையில் அந்த விவகாரம் அடிதடி வரை சென்று பின்னர் அந்தப் போதை சேட்டை செய்த நபர் கைதுசெய்யப்பட்டார். தமிழ்நாட்டிலேயே அதிகம் குடிப்பவர்கள் திருப்பூரில் தான் உள்ளதாக வரும் புள்ளி விவரங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கும் தகவல் இது. "வருடத்துக்குக் கிட்டத்தட்ட 1,100 கோடி ரூபாய்க்குக் குடிக்கிறார்கள். திருப்பூரில் தொழிலாளர்கள் அதிகம். அவர்கள் கைகளில் பணப்புழக்கமும் அதிகம். வார இறுதிகளில் திருப்பூரின் குடி விற்பனை எகிறுகிறது.
அதிகபட்ச நிறுவனங்களில் சனிக்கிழமை தோறும் வாராந்திர சம்பளம் போடுகின்றனர். வாரச் சம்பளத்தை வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தால், ஞாயிறு முழுக்கக் குடி தான். திங்கட்கிழமை வரையிலும் இந்தக் குடி நீள்கிறது. பெரும்பாலான தொழிலாளர்கள் குடித்துவிட்டு திங்கட்கிழமைகளில் வேலைக்கு வருவதில்லை. அன்றும் விடுமுறை போலவே இருக்கிறது என்பதால், திங்கட்கிழமைக்கு 'சின்ன ஞாயித்துக்கிழமை’ என்று திருப்பூரில் மட்டுமே பெயர்.
'இதை ஞாயிறு, திங்கள்னு பார்ப்பதை விட, கையில காசு தீர்ந்துபோகிற வரைக்கும் குடிப்பாங்கன்னு புரிந்து கொள்ளலாம். அதற்காக வாரச் சம்பளத்தைப் பத்திரமா வாங்கி வைத்துக்கொண்டு வாரம் முழுக்கக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கிறது இல்லை. அந்த இரண்டு நாளில வெறியோடு குடித்துவிட்டு செவ்வாக்கிழமை வேலைக்குப் போகிறது. அடுத்த 5 நாளைக்கு வேலை பார்த்துவிட்டு மறுபடியும் குடி. அதாவது இவங்க வேலை பார்க்கிறதே குடிக்கிறதுக்குத்தான்னு ஆயிடுச்சு...' என்கிறார் திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மேலாளர்.
அப்படியானால் ஞாயிறு, திங்கள் தவிர்த்த மற்ற நாட்களில் குடிப்பது இல்லையா? அப்படியும் சொல்ல முடியாது. அந்த இரண்டு நாட்களிலும் அதி தீவிரக் குடி; மற்ற நாட்களில் தீவிரக் குடி. அவ்வளவு தான் வித்தியாசம். இதற்காக கம்பெனியிலிருந்து வார நாட்களில் முன்பணமும் வாங்கிக்கொள்கின்றனர். முன்பணம் வாங்காத தொழிலாளர்கள் மிகமிகக் குறைவு. ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் முன்பணம் வாங்கி, மரணத்தை நோக்கி குடி மூலம் தவணைமுறையில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும் தொழிலாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். திருப்பூரில் மட்டும் ஏன் இப்படி குடித்துத் தீர்க்க வேண்டும்? முதல் காரணம், இங்கு இருக்கும் பெரும்பான்மைத் தொழிலாளர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இங்கு உதிரிகளாகத்தான் வாழ்கின்றனர். 'இப்படி வாங்குற சம்பளத்தை எல்லாம் குடிச்சே அழிச்சியன்னா, உன் குடும்பத்தை யார் பார்க்குறது?’ எனக் கேள்வி கேட்க நெருங்கிய உறவுகள் யாரும் அருகிலில்லை.
கசக்கிப் பிழியும் வேலையின் காரணமாக நண்பர்கள் கூட இவர்களுக்கு இருப்பதில்லை. ஒரு மனிதன் சமூகத்துடன் இணையும் புள்ளி எதுவும் இவர்களுக்குக் கிடையாது. மேலும், சொந்த ஊரில் இவர்கள் இருந்தால் உறவுக் கல்யாணம், காட்சிக்குப் போக வேண்டும்; மொய் செய்ய வேண்டும்; ஊர்த் திருவிழா, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செலவு வரும் என்பன போன்ற அன்றாட நெருக்கடிகள் இருக்கும். சம்பாதித்த பணத்தை அதற்கெனச் செலவழிக்க வேண்டிய நிர்பந்தமிருக்கும். இங்கு அதுவும் இல்லை. இரண்டாவது, வேலை கிடைப்பது குறித்த அச்சம் தொழிலாளர்களுக்கு இல்லை.
இந்த வாரம் ஒரு கம்பெனி, அடுத்த வாரம் வேறு ஒரு கம்பெனி என்று போய்க் கொள்ளலாம். எங்கும் எப்போதும் வேலை தயாராக இருக்கிறது. இது அவர்களுக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையைத் தருகிறது. இப்போது கையில் இருப்பதைக் குடித்து அழித்தாலும், நாளையே சம்பாதித்துவிட முடியும் என எதிர்மறையான நம்பிக்கை கொள்கின்றனர்.
அதே நேரம் இந்தச் சிக்கலை தொழிலாளர்களின் கோணத்திலிருந்து மட்டும் மதிப்பிடுவது சரியற்றது. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை 'வெறுங்கையோடு திருப்பூருக்குப் போனால் உழைத்து முன்னேறலாம்’ என்ற நிலையிருந்தது. அது உண்மையும் கூட. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இப்படி திருப்பூரில் உழைத்து முன்னேறினார்கள் என்பது நமக்குத் தெரியும். ஒற்றை ஆளாக திருப்பூர் வந்து கடும் உழைப்பால் சொந்த ஊரில் நிலபுலன்கள் வாங்கி, பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துகொடுத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். இன்று அப்படியானவர்களைப் பார்ப்பது அரிது. முன்பு, வாங்கிய சம்பளம் குடும்பத்துக்குப் போனது. இப்போது நேராக டாஸ்மாக் மதுபானக் கடைகள் செல்கிறது. 'ஏழைத் தொழிலாளர்கள் உழைக்கும் பணத்தை, குடியின் பெயரால் இந்த வழிபறி நடக்கிறது’ என்ற குற்றச்சாட்டு எவ்வளவு உண்மை என்பதை திருப்பூரில் கண்கூடாகப் பார்க்கலாம்.
ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தின் கோணத்தில், தொழிலாளர்களின் குடி அவர்களைப் பாதிக்கிறதா? 'நிச்சயம் பாதிக்கிறது' என்கிறார் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஒருவர். 'ஒவ்வொரு திங்கட்கிழமையும் உற்பத்தித் திறன் கணிசமாகக் குறைகிறது. மற்ற வார நாட்களை ஒப்பிட்டால், திங்கட்கிழமை அன்று 40 சதவிகிதம் உற்பத்தி குறைகிறது. குடிக்கு அடிமையான ஒரு தொழிலாளியால் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அவரது வேலை செய்யும் திறன் மோசமாகக் குறைந்து கொண்டே செல்கிறது. அவரால் வேலையில் கவனம் செலுத்த முடிவதில்லை. அதேபோல இரவு ஷிஃப்ட் வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, குடியின் காரணமாக கணிசமாகக் தற்போது குறைந்துவிட்டது. அதையும் மீறி வந்தாலும் குடித்துவிட்டு வருகின்றனர். இதனால் இரவு ஷிஃப்ட்டில் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பணிபுரிய பல நிறுவனங்கள் மற்றும் சட்டம் அனுமதிப்பதில்லை. வேலை முடிந்து, பேருந்தில் திரும்பிப் போகும்போது, 'கடையை மூடிருவாங்க... சீக்கிரம், ஓட்டுங்க சீக்கிரம்’ என வாகன ஓட்டுநரைத் தொழிலாளர்கள் அவசரப்படுத்துகின்றனர். அதே நேரம் குறைந்த ஊதியம் வாங்கும் தொழிலாளர்கள் மட்டும் தான் குடிக்கிறார்கள் என்பதல்ல... எங்கள் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர் ஒருவர், வாங்கும் சம்பளத்தில் 30 ஆயிரத்தை குடித்தே அழிப்பார். மாலை 7 மணிக்குப் பிறகு எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் அவரைப் பிடித்து வைக்க முடியாது. இப்படி தொழிலாளர்கள், முதலாளிகள் என திருப்பூரின் னைத்துத் தரப்பினரையும் குடி, மோசமாகவே அவர்கள் ஆயுளுடன் சேர்ந்து பாதிக்கிறது' என்கிறார்.
இது திருப்பூரின் கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் தேவை அதிகம் இருக்கிற அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது. குடிப்பழக்கம் உள்ள தொழிலாளர்கள் திடீர், திடீரென வேலைக்கு வராமல் மட்டம் போட்டுவிடுகின்றனர். அவர் ஒரு கடையின் புரோட்டா மாஸ்டராக இருந்தால், அன்று அந்தக் கடையின் வருமானம் கெடுகிறது. அல்லது அவசர அவசரமாக வேறொரு மாஸ்டரை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவுப் பொருளின் சுவை சீராக இல்லை எனில், வாடிக்கையாளரைக் கடைகள் தக்க வைக்கவும் முடியாது. ''அதற்காக குடிக்கிறவர்களைக் கண்டிக்கவும் முடியாது. உடனே வேலையில் இருந்து நின்று விடுவார். கண்டும், காணாதது போல போகவேண்டியிருக்கிறது'' என்கிறார்கள் சிறுதொழில்கள் நடத்துபவர்கள். இப்படித் தொடர்ந்து குடிக்கும் தொழிலாளர்களின் வேலைத்திறன் மோசமாகப் பாதிக்கப்படுகிறது என்றால், குடிப்பதையே ஒரு வேலையாகச் செய்பவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
இப்போது மாலை 6 மணி என்று வைத்துக்கொள்வோம். மாநிலம் முழுக்க இருக்கும் 4,000-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபானக் குடிப்பகப் பார்களில் அமர்ந்து குறைந்தபட்சம் 50 லட்சம் பேராவது குடித்துக்கொண்டிருப்பார்கள். அதாவது, சமூகத்தின் உற்பத்தியில் பங்கேற்க வேண்டிய 50 லட்சம் மனித ஆற்றல்கள், சமூகத்தின் அழிவில் பங்கேற்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் குடிப்பதற்காக இரண்டு மணி நேரத்தைச் செலவிடுகின்றனர் எனக் கொள்வோம்.
50 லட்சம் நபர்கள் X 2 மணி நேரம் = 1 கோடி மணி நேரம். இத்தனை பிரமாண்டமான நேரத்தை, அதற்கான மனித ஆற்றலை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால், தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் 18,000 ஏரி, குளங்களையும் ஒரே மாதத்தில் தூர் வாரிவிடலாம். பல மகத்தான அதிசயங்களை நிகழ்த்தவல்ல கோடிக்கணக்கான இளைஞர்கள் கூட்டம் நம் கண் முன்னே குடித்துக் குடித்தே வீழ்கிறது. முன்பு எல்லாம் குடித்துவிட்டு சாலையில் வீழ்ந்துகிடப்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்போது டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கும் ஒவ்வொரு வீதியிலும் இரண்டு பேர் போதையில் மல்லாந்து கிடக்கின்றனர். அவர்களில் பெரும்பகுதி, இளைஞர்களாக இருப்பது இன்னும் கொடுமை.
உண்மையில் நாம் ஒரு தலைமுறையையே குடிகாரர்களாக மாற்றியிருக்கிறோம். ஒரு தலைமுறை இளைஞர்களின் உடல்களில் இருந்து இரத்தத்தை உறிஞ்சி, ஆல்கஹாலை செலுத்திக்கொண்டிருக்கிறோம். அவர்கள் ஆயிரம் ஆயிரமாக, லட்ச லட்சமாக நோயில் வீழ்ந்து மடிந்து போகிறார்கள். உடல் சிதைந்து உறுப்புகள் உருக்குலைந்து உயிரின் வேதனையில் மரணத்துக்காக ஏங்குகின்றனர். இன்றைய இளைஞர்கள் மத்தியில் எங்கு பார்த்தாலும் மது மண்டிக்கிடக்கிறது. கல்லூரி படிக்கும் மாணவர்கள் ஏன் பள்ளி மாணவர்கள் கூட மது விற்கும் கடையில் ஒரு கையில் காசு கொடுத்து மறு கையைப் போத்தலுக்காக ஏந்தி நிற்கும் அவலக் காட்சிகளும், ஊருக்கு வெளியில் அதாவது பாலம், சாலையோரம் உட்கார்ந்து மது குடிக்கும் அசிங்கங்களும் அன்றாடம் அரங்கேறுகிறது (அது தான் இப்போது ஃபேசன்னு சொல்லிக்கிறாங்க).
தமிழகத்தில் மது அருந்துவோரின் சராசரி வயது 13 என்கிறது ஒரு புள்ளி விபரம். பெரியவர்கள் மதுவுக்கு அடிமையாகி தனது வாழ்நாளை தொலைத்தது பற்றிக் கூட நாம் அதிகம் கவலைப் படவில்லை. இளைஞர்களின் மது பழக்கம் தான் அதிக வேதனையைத் தருகிறது. முக்கிய பண்டிகை தினங்கள், வீட்டு விழாக்கள் என்றிருந்த மதுப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுறுவி அதிகாலையிலே மது அருந்தும் பழக்கம் வந்து விட்டதை என்னவென்று சொல்வது? இன்றைக்கு திருமணத்திற்கும் மது, மனிதன் மரணத்துக்கும் மது, ஏன் புது ஆடை உடுத்தினால் மது என்று கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகள் வாசல் மிதிப்பது அரசியல் மற்றும் அது சார்ந்த வியாபாரம் செய்து வாழும் நபர்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா! அவர்களுக்கு ஏற்றாற்போல் அரசு மது பானங்கள் விற்பனையை அதிகப்படுத்தியுள்ளது.
தனது நாட்டுக்காக, குடும்பத்திற்காக உழைக்க வேண்டிய மூளைசக்தி மது எனும் அரக்கனால் பாழ்பட்டு வருகிறது. மதுவுக்காக பொய் சொல்லுதல். திருடுதல், கடத்தல் என அதிகரித்துள்ளது. மது அருந்தியவுடன் வேகமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாவது, பாலியல் வன்கொடுமை போன்ற சமூகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வைக்கிறது.உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி உலகில் 2 பில்லியன் மக்கள் மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். அவர்களில் 75 மில்லியனுக்கும் மேற்பட்டோர் தங்கள் மதுப்பழக்கத்தினால் உண்டான உடல் உபாதைகளினால் அவதிப்படுகின்றனர். மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது காரணமான நோய்களினால் இறக்கின்றனர். 15 முதல் 29 வயதிற்குட்பட்டோரில் 9 சதவிகித இறப்புக்கு மதுப்பழக்கம் நேரிடையான காரணமாக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக பரவலாக வளர்ந்த நாடுகளில் மதுப்பழக்கம் குறைந்து வரும் நிலையில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அது அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாறிவரும் சமூக கட்டுப்பாடுகள், நகரமயமாக்கல், மது எளிதாக கிடைத்தல், அதனை வணிகப்படுத்தியமை, அதன் ஏற்றுமதி இறக்குமதி விதிகளில் தாராளம் இவையே அதற்கு காரணம் எனவும் அது கூறுகிறது.
தமிழ்நாட்டில் ஆறில் ஒருவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதில் பெரும்பாலும் ஆண்களே எனினும், பெண்களின் பங்கும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆய்வில், பெண்களும் கிட்டதட்ட ஆண்களுக்கு இணையான எண்ணிக்கையில் இருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது என்றாலும் இளைஞர்கள் மத்தியில் அது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 1950 ஆம் ஆண்டுகளில் 23 ஆக இருந்து மது அருந்துவோரின் சராசரி வயது 1990 களில் 19 ஆக குறைந்து தற்போது 13 ஆகக் குறைந்துள்ளது. டாஸ்மாக் போன்ற மதுபான சமூக அங்கிகாரம் மற்றும் வாய்ப்புக்கள் காரணமாக வரும்காலங்களில் இது மேலும் குறையும் என்பது மறுப்பதற்கில்லை.
சமுதாயத்தில், பல்வேறு தரப்பட்ட மக்களையும் திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகளில், உண்மையான சமுதாய அக்கறையுடன் தொலைநோக்குப் பார்வையுடன், நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை வருங்கால சந்ததி நிச்சயம் போற்றும்; நாட்டுக்கு வருமானம் முக்கியம் என்றால், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை நிலைநிறுத்துவதன் மூலம் நிச்சயம் பெருக்கிக் கொள்ள முடியும். மதுபாணக்கடைகளை தன்கையில் எடுத்துக் கொண்டதை மாற்றி மணல், கிரானைட் கல்குவாரிகளை தன் வசம் எடுத்துக் கொண்டு முறைப்படுத்தினாலே, அரசு கஜானாவில் மானமுள்ள வருமானம் அதிகாளவில் வந்துசேரும். என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஆகையால் ஒவ்வொரு இளைஞனும் நாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள் எனும் உறுதி மொழியை ஏற்று மதுவின் மயக்கத்திலிருந்து நாட்டை நல்ல வழியில் திசை திருப்ப வேண்டுமென்பதே எம் மக்கள் ஆசை.
புராண, இதிகாச, வேத, காலத்திலும் பாணங்கள் உண்டு, சங்ககாலத்திலும் உண்டு ஆனால் அந்த பாணங்களை அருந்திவிட்டு வந்தவன் ஒதுங்கி முக்காடு போட்டு மறைந்து சென்ற நிலை தற்போது மாறிவிட்டது குடிக்கும் குடிகாரன் சபை நடுவே இருக்கும் நிலையில் குடிக்காத நபர்கள் ஒதுக்குப்பட்ட நபராக இருக்கக் காரணம் பொதுவெளியில் சமுதாயத்தில் ஒழுக்கம் பண்பாடு சிதைவு தான் காரணம்
சங்ககால அரசன் நன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி, ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும், கூத்தாடிகளும் அடங்கிய ஒரு கூட்டம் அவன் மறைவால் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வழியாகப் பயணம் போகிறது. அவர்களை வழியில் சந்திக்கிறார் புலவர் பரணர் அவருக்கு நன்னன் இறந்த கதையைச் சொல்லி, “நீங்கள் பறம்புமலை அரசன் பாரியிடம் செல்லுங்கள். தன் படைகளால் மூவேந்தர்களையும் வெல்லக்கூடியவன் உங்கள் கலைக்கு முன்பாகச் சரணடைவான். பெரிய வள்ளல் அருகிலேயே தமிழார்ந்த அறிஞர் கபிலரும் உள்ளார்” என வழிகாட்டுகிறார். ஆக, பாணரும் கூத்தரும் அடங்கிய கூட்டம் பறம்பு மலை நோக்கி பாரியிடம் செல்கிறது. இது பெரும்பாணாற்றுப் படையில் வருகிற கதைச் சுருக்கம்.
கலை மக்களால் எடுத்தியம்பப்பட்ட இந்தக் கதைப்பாடலுக்கு உள்ளே நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள் கூட மிகவும் நுணுக்கமாக நம்மை அந்தக் காலத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்திச் சிலிர்க்க வைத்துவிடும். உதாரணமாக:-. மன்னர் பாரியைப் பார்க்கப் போகும் பாணர் கூட்டம் வழியிலே சில வேளாளர்களைச் சந்திக்கிறது. ஏழு நாட்கள் நடக்கும் தங்களுடைய கோவில் திருவிழா நிகழ்ச்சியில் நீங்கள் வந்து கலை நிகழ்ச்சிகளும் கூத்தும் நிகழ்த்த வேண்டுகிறார்கள் வேளாளர்கள். செல்வச் செழிப்புமிக்க அவர்கள் ஊருக்குள் நுழைந்தபோது பாணன் சொல்கிறான் "இங்கே பெண்கள் யானைத் தந்தங்களை உலக்கையாக வைத்து நெல் குத்துகிறார்களைய்யா" என்று. ஒரு சொல்லில் அவர்கள் வாழ்வும் வாழ்வியல் வளமும் பிடிபடுகிறது.
நாம் கூற வந்த விஷயம் இதுவல்ல.. அது வேறு
வேளாளர் இல்லத்துக்கு வந்த பாணர்களுக்கு தின்னையில் அமரவைத்து களைப்பாக இருப்பீர்கள் என்று 'நறும்பிழி' என்ற கள்ளை கோப்பையில் ஊற்றிக் கொடுக்கிறார்கள் வேளாளர்கள். கோப்பையில் ஊற்றும் போதே நறும்பிழியின் வாசனையில் மயக்கமுறும் பாணன் அந்தக் கள் தயாரிக்கப்படும் வித்தையை வேளாளர் வழிவந்த குடியானவனிடம் கேட்கிறார். மிகவும் ரகசியமாய் அவர்களுக்குள் பரிமாறப்படுகிறது கள் தயாரிக்கும் விதம்.குறித்து பாணருக்கு விளக்கிய குடியானவர்
"நெல் அரிசியை நன்கு சமைத்து, உருண்டையாகப் பிடித்து, பெரிய வாயுள்ள பாத்திரத்தில் காயவைத்து காட்டு இலைகளையும், தாத்திரிப் பூவையும் சேர்த்துப் பிசைந்து, ராவும் பகலும் நீர்விட்டுப் பிசைந்து, கொஞ்சம் பனை வெல்லமும் சேர்த்து, மண்பானையில் ஊற்றி மூடிவைத்துவிடுவோம். இந்த ஊறலை பலகாலம் கழித்து, வேக வைத்த பனைநார் பெட்டியில் வடிகட்டி எடுத்தால் நறும்பிழி எனும் கள் பாணம் தயாராகிவிடும்” என்றான் குடியானவன். வெல்லமும் அரிசியும் கலந்து சேர்த்துத் தயாரிக்கப்படும் 'நறும்பிழி'யை காஞ்சி, தொண்டை மண்டலத்து, கடற்கரையூர்காரர்கள் தான் தினுசு தினுசாய் தயாரித்து ருசி பார்த்திருக்கிறார்கள்.நேரடியாக பனையில் கள் இறக்கும் வித்தையை கடற்கரையூரான ஆமந்துறையில் தோட்டத்தில் களைவேலை செய்கிற பெரியவர் ஒருத்தரிடம் கேட்டுத் தெரிந்திருந்த நிலையில் 'நுங்கும் பழமும் பூக்கிற பனையை 'பெண் பனை' என்றும், நீள நீளமாய் பாளை மட்டும் முளைக்கிற பனையை ஆண் பனை என்றும் பார்த்தவுடனே பிரித்தறிய முதலில் சொல்லிக் கொடுத்தார். பிறகு, இந்த ஆண் பனையில் தான் 'கள்ளு' தயாரிப்பதெல்லாம் என்று விவரித்தார்.
“ரெட்டையாய் கவட்டைமாதிரி நீட்டி நிற்கிற பனம் பாளையை லேசாக தண்டில் கிழித்து, நெருக்கிவைத்து ஒரு கட்டு கட்டி, பாளையின் நுனியை சாம்பாருக்கு கேரட்டை வட்டமாய் அரிந்து போடுகிறமாதிரி பத்து பதினைந்து வட்டம் பனையேரிகளால் அறுத்த பிறகு, அதை அப்படியே விட்டால் பாளையில் நீர் துளிர்த்துக் கொண்டு வெளிப்படும். அதை அப்படியே கலயத்தில் வழிகிற மாதிரி நுழைத்துவிட்டால், பானையின் அளவைப் பொருத்து கள் சுரப்பை அரை நாளைக்கு வடியவிடுவார்கள். அதில் சுண்ணாம்பு சேர்த்தால் இந்த மண் கலயத்தின் உள்பக்கமாக நல்ல சுண்ணாம்பை ஈயம் பூசுகிறமாதிரி தடவி விட்டால் கள்ளுக்குப் பதில் கிடைப்பது பதனீராகிவிடும். இந்த நேரடியான பனங்கள்ளைத்தான் 'பெண்ணைப் பிழி' என்கிறது சங்ககாலப்பாடல்கள்.
சங்க இலக்கியத்திலும் அவற்றுக்குள் தேறல், நறவு, நறும்பிழி, கள்ளு என்று ஏகப்பட்ட வகையறாக்களும் உண்டு. காட்டுத்தேனை எடுத்து நல்ல பழுத்த, ஈரமில்லாத மூங்கில் தண்டுக்குள் ஊற்றி வைத்து, நிறைய நாள் காத்திருந்தால், கட்டியாக மாறிடும் தேன் பிசினை தண்ணீரோடு கரைத்துக் குடிப்பது தேக்கள் தேறல். இன்றைக்கு வழங்குகிற டொப்பி அரிசி மாதிரி தோப்பி என்கிற ரக அரிசியில் பனங்கருப்பட்டி சேர்க்காமல் தோப்பி கள் அக்காலத்திலுள்ள மக்கள் தயாரித்திருக்கிறார்கள்.
இதேப்போல 'நறவு' என்ற பூ சேர்த்து (அதற்கு இலவங்கம் எனப் பெயர்) தாயாரிக்கப்பட்ட கள் வகையறாவை மதுரையில் வாழ்ந்த பாணர் குடிப் பெண்கள் குடித்ததாக சங்கப் பாடல் உண்டு. வைகை ஆற்றில் குளித்துக் கரையேறினதும் அடித்துச் சுருட்டும் குளிரைப் போக்கிக்கொள்ளவும், உடல்சூடு கூடவும் நறவு அருந்தியிருக்கிறார்கள். குடிக்கும் முன்பு வெள்ளையாக இருந்த அவர்கள் கண்கள் நறவு குடித்தபிறகு நறவம் பூப்போலச் சிவந்ததாக (வெள்ளை நிறமுடைய லவங்கம் கருஞ்சிவப்பாக
மாறிவிடும்) என எழுதுகிறான் புலவன் மாங்குடி மருதனார்.பாணனும் கூத்தனும் அருந்தியதில் மிச்சமிருக்கும் ரகமான 'பெண்ணைப் பிழியும்', மரங்களிலும், தானியங்களிலும், தேறல் வைத்துச் சேர்க்கப்பட்ட கள் வகைகளுக்கும் இன்றைக்கு சட்டப்படி தடைசெய்யப்பட்டு புழக்கத்தில் இல்லை. ஆனால் மதுப் பழக்கத்தை வைத்து காசு பார்த்துப் பழகின அரக்கர்களான ஊழல் அரசியல் வா(வியா)திகள் விடவில்லை.
- இளைய தலைமுறையினர் போதை தெளிவோம் குடி குடியை கெடுக்கும் -
கருத்துகள்