ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து இரண்டு நாள் ஆய்வு மேற்கொண்டார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
குல்காம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக அங்கு சென்றுள்ள மத்திய இணையமைச்சர், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களின் பயனாளிகளோடு கலந்துரையாடினார். பொதுமக்களை சந்தித்த அவர், பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகள் மக்களிடம் சென்றடைந்த விதம் குறித்து கேட்டறிந்தார்.
இன்று குல்காம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு அரசு துறை சார்ந்த அரங்குகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார். அங்கு 6.9 கோடி ரூபாய் மதிப்பிலான திருமண மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த மாவட்டத்தில் 3,200 சுயஉதவிக் குழுக்கள் இருப்பதாகவும், அதன்மூலம் பல்வேறு துறைகளில் 54,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குல்காம் மாவட்டத்தின் சுற்றுலாத் துறைக்கு மத்திய அரசு அதிமுக்கியத்துவம் வழங்கி வருவதாகவும், அங்குள்ள வசதிகளை மேம்படுத்தவும், நவீனமயமாக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதன்மூலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படும் என்று அமைச்சர் டாக்டர் முருகன் தெரிவித்தார்.
தமது இரண்டுநாள் பயணத்தின் போது மீன்வளர்ப்புப் பண்ணைகளை பார்வையிட்ட அமைச்சர், பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின்கீழ், உள்நாட்டு மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதுடன் மலைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
காஷ்மீர் பல்கலைக் கழகத்தில் இயற்கை சார்ந்த விவசாயத்தின் மூலம் பெறப்பட்ட காய்கறிகள் குறித்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மத்திய இணையமைச்சர் சான்றிதழ் வழங்கினார்.
கருத்துகள்