நாளை சட்டசபையில் தாக்கலாகும் அறிக்கை.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை வைக்கப்படுமென்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அத்துடன் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையும் சட்டசபையில் வைக்கப்படுமென்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று காலமான பல்வேறு தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து இரண்டு நாட்களுக்கு கூட்டம் நடக்க உள்ளது.முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக மெதுவாக நடந்த விசாரணை சமீபத்தில் முடிந்த விசாரணையின் முடிவில் அறிக்கை தயார் செய்யப்பட்டு அது தமிழ்நாடு அரசிடம் வழங்கப்பட்டது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை விவரங்கள் முழுமையாக பொதுவில் வெளியாகவில்லை.
அதே சமயம் இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயளாளர் சசிகலா நடராஜன் , முன்னால் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்களென்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயளாளர் V.K.சசிகலா நடராஜன் , டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம் மோகன் ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்டவல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளதென்று தமிழ்நாடு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் தான் அந்த அறிக்கை நாளை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கையும் சட்டசபையில் வைக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதில் காவல்துறை மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் இணையத்தில் வெளியாகின. இந்த அறிக்கையின் சில பகுதிகள் ஏற்கனவே ஊடகங்களில் கசிந்தன.
இந்த நிலையில் தான் இரண்டு அறிக்கையும் நாளையே சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த அறிக்கைகள் பற்றி இப்போது விவாதிக்க முடியாது. நாளை அவையில் தாக்கல் செய்யப்பட்ட பின் அதை பற்றிய விவரங்கள் மக்களுக்குத் தெரியும். இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
கருத்துகள்