திரிபுராவில், கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார்
திரிபுரா மாநில நீதித்துறை அகாதெமியை இன்று (அக்டோபர் 12 2022) திறந்து வைத்த குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு, அகர்தலாவின் நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், ரவீந்திர சதபர்ஷிகி பவனில் இருந்து மெய்நிகர் காட்சி வாயிலாக, அகர்தலாவில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியை திறந்து வைத்த குடியரசுத் தலைவர் மகாராஜா பிரேந்திர கிஷோர் மாணிக்யா அருங்காட்சியகம், கலாச்சார மையம், சாலைகள், அகர்தலா இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கான நிரந்தர வளாகம், பள்ளிகள், கல்லூரிகள் சாலைகள் உள்ளிட்ட திரிபுரா அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
ரவீந்திர சதபர்ஷிகி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் திரிபுராவின் கல்வி, நீதித்துறை மற்றம் சட்டமன்றத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி மாநிலத்தின் வளமான கலாச்சாரத்தை உயர்த்தும் என்று தெரிவித்தார்.
திரிபுராவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டுவதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டார். சட்ட கல்வித் துறையில் தேசிய சட்டப் பல்கலைக் கழகம் கடந்த முப்பதாண்டுகளாக குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருவதாக கூறினார். இன்று பொருளாதார வளர்ச்சியுடன், வழக்கறிஞர் பணியும் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகம் வடகிழக்குப் பகுதியில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் சட்டக் கல்விக்கான முக்கிய மையமாக உருவெடுக்கும் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதுமுள்ள தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அகர்தலாவின் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிரந்தர வளாகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய அளவுகோலாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள்