முன்னோர்கள் வரலாற்றை மாணவர்கள் அறிந்திருத்தல் அவசியம்: மாநிலங்களவை உறுப்பினர் பேச்சு
நமது முன்னோர்கள் வரலாற்றை மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.சண்முகம் தஞ்சாவூரில் பேசினார்.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகம் தஞ்சாவூரில் ஏற்பாடு செய்திருந்த அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நிறைவு விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம். சண்முகம் கலந்துகொண்டு புகைப்படங்களை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர், மாணவர்களின் கல்வித் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், தான் கற்றதை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற பொது நலம் இருக்க வேண்டும் என்றும் பேசினார்.
75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில், மத்திய மக்கள் தொடர்பகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.
சிந்து சமவெளி நாகரிகம், கீழடி அகழ்வாராய்ச்சி ஆகியவற்றின் மூலம் நமதுமுன்னோர்கள் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், இக்கண்காட்சியை காணுகையில், சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுவதாகவும் பேசினார்.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பொதுமக்கள் கண்காட்சியை கண்டு ரசித்து மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள், அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் வேளாண்துறை, அஞ்சல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
கருத்துகள்