ரூ.10.58 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ஒருவர் கைது
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஜிஎஸ்டி விசாரணை இயக்குநரகம் சார்பில் சென்னையில் உள்ள தனியார் திருமண மற்றும் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. வரி ஏய்ப்பு செய்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அந்த நிறுவனம் சுமார் ரூ.11 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 3 பிரிவுகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.59 கோடி வசூல் செய்துவிட்டு அதற்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை. வாடிக்கையாளர்களிடமிருந்து குறைந்த ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி இல்லாத பிரிவு உட்பட 3 பிரிவுகளின் அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டு சென்னை எழும்பரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற வழக்குகளில் வரி மோசடியை அடையாளம் காண உதவும் தகவல் தருபவரை பாதுகாப்பதுடன் அவருக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது அரசின் கொள்கை என்பதால் அதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை ஜிஎஸ்டி விசாரணை இயக்குநரகத்தின் தலைமை கூடுதல் இயக்குநர் மயங்க் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்