ரூ. 2900 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை அகமதாபாத்தின் அசர்வாவில் பிரதமர் தொடங்கி வைப்பு
ரூ. 2900 கோடி மதிப்பிலான இரண்டு ரயில்வே திட்டங்களை அகமதாபாத்தின் அசர்வாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், குஜராத்தின் இணைப்பு மற்றும் வளர்ச்சியில் இன்று ஓர் முக்கிய தினம் என்று குறிப்பிட்டார். அகல ரயில் பாதை சேவை இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியிருந்த குஜராத் மாநிலத்தின் லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் அத்தகைய துன்பத்திலிருந்து விடுபட போகிறார்கள் என்றார் அவர். குஜராத்தின் இந்தப் பகுதி, இனி அண்டை மாநிலமான ராஜஸ்தான் மற்றும் நாட்டின் இதர பகுதிகளுடன் நேரடியாக இணைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
“மீட்டர் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்படும் போது அது ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குகின்றது”, என்று பிரதமர் கூறினார். கட்ச் மற்றும் உதய்பூர் ஆகிய சுற்றுலாத் தலங்களுடன் இனி நேரடி ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும். இந்தப் பகுதியில் வசிக்கும் வணிகர்களும் தில்லி, மும்பை, அகமதாபாத் போன்ற மிகப்பெரிய தொழில்துறை மையங்களுக்கு நேரடியாக தங்கள் பொருட்களை கொண்டு செல்லும் பயனைப் பெறுவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த வழித்தடத்தால் பாவ்நகர்- வேராவல் இடையேயான தூரம் 470 கிலோ மீட்டரிலிருந்து 290 கிலோமீட்டராகக் குறைவதால், பயண நேரம் 12 மணி நேரங்களிலிருந்து வெறும் 6:30 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். அதேபோல பாவ்நகர்-போர்பந்தர் இடையான தூரம் 200 கிலோமீட்டர் வரையிலும், பாவ்நகர்- ராஜ்கோட் இடையிலான தூரம் 30 கிலோமீட்டர் வரையிலும் குறையும் என்றார் அவர். திட்டங்களின் அளவு மற்றும் வேகத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படுவதோடு, தரம், வசதி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் அம்சங்களிலும் கவனம் செலுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
“சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு ஏழை-பணக்காரர்கள், கிராமம்- நகரம் ஆகியவற்றுக்கு இடையே இருந்த இடைவெளி நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதை தீர்ப்பதற்காக அரசு தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. ஏழைகளுக்கு உறுதியான வீடுகள், கழிவறைகள், மின்சாரம், தண்ணீர், எரிவாயு, விலையில்லா மருத்துவ சிகிச்சை மற்றும் காப்பீட்டு வசதி போன்றவை இன்றைய சிறந்த ஆளுகையின் குறிப்பிடத்தக்க சாதனைகள் ஆகும்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்