மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டி சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பயணிகளுக்கு தேவையான வசதிகளை உடனடியாக செய்து தருமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். பின்னர், வடபழனி முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயில் பயணிகளிடம் உரையாடி, மெட்ரோ ரயில் பயண அனுபவங்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்,
பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் பேரில் அனைத்து நகரங்களுக்கும் மெட்ரோ வசதியை விரிவுபடுத்தி வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியும் ஒதுக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக தமிழ்நாடு அரசுக்கும் நிதி ஒதுக்கி உள்ளதாக கூறிய அவர், கூடுதல் பணிகளுக்கும் நிதியை ஒதுக்கி வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் கட்ட நகரங்களில் ஏற்கனவே மெட்ரோ அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், இரண்டாவது கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் பணிகளை துவக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் திரு. சித்திக் ஐஏஎஸ் உடன் இருந்தார்.
கருத்துகள்