சென்னை துறைமுகத்தில் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்
சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் செயல்பாடுகள், சுதந்திரத்திற்கு பிந்தைய 100 ஆண்டுகளுக்கான அமிர்தகாலம் முழுமைக்கும் (2047 வரை) இவற்றின் விரிவடைந்த பெருந்திட்டம் ஆகியவற்றை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் இன்று ஆய்வு செய்தார்.
இந்த துறைமுகத்தின் மாபெரும் வளர்ச்சித் திறனையும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பொருள்போக்குவரத்து இணையப்பக்கம் – கடற்பகுதி உள்ளிட்ட மத்திய அரசின் டிஜிட்டல் முயற்சிகளை டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் எடுத்துரைத்தார். பொருள் போக்குவரத்து துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டில் பேரார்வத்துடன் பங்கேற்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் நடைபெற்ற பல்துறை பணியரங்கில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மண்டல அதிகாரியான பொது மேலாளர் திரு எஸ் பி சோமசேகர் பேசுகையில், இந்தப் பிராந்தியத்தில் வரவிருக்கும் சாலைப் போக்குவரத்து திட்டங்கள் பற்றி விவரித்தார். மதுரவாயல் – சென்னை துறைமுகம் இடையேயான மேல்மட்ட சாலைத்திட்டத்தின் தற்போதைய நிலை பற்றியும் அவர் கூறினார்.
தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் திருமதி நீனு இட்டியேரா பேசுகையில், போக்குவரத்தில், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், சென்னை நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசலையும், பொருள் போக்குவரத்துக்கான செலவுகளைக் குறைக்கவும், சரக்கு ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே தயார் நிலையில் இருப்பது பற்றி கூறினார்.
இந்தப் பணியரங்கில், நிறைவுரையாற்றிய டாக்டர் சஞ்சீவ் ரஞ்சன் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில், தமிழ்நாட்டின் பங்களிப்பை பாராட்டினார். இந்தப் பிராந்தியத்தின் மனித சக்தி மூலம், பிரதமரின் விரைவு சக்தி முன்முயற்சியும், தேசிய சரக்குப் போக்குவரத்து இணையபக்கம் – கடற்பகுதி, என்பதும் மகத்தான வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
முன்னதாக, இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள டாக்டர் சஞ்சீவ் ரஞ்சனை சென்னை துறைமுக ஆணையத்தலைவர் திரு சுனில் பாலிவால் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. காமராஜர் துறைமுக செயல்பாடுகள் குறித்து நாளை (01.11.2022) அவர் ஆய்வு செய்வார்.
கருத்துகள்